சென்னை மணலியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முகாம்களில் உள்ளவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
பூண்டி ஏரியில் இருந்து வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டதால் கொற்றலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன்காரணமாக மணலியில் ஆற்றின் கரையோரம் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. வீடுகளை தண்ணீர் சூழ்ந்து மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், வெள்ளம் பாதித்த இடங்களில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, குடியிருப்பு வாசிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். குடியிருப்புகளில் சூழ்ந்துள்ள தண்ணீரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதனையடுத்து தற்காலிக முகாம்களுக்கு சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளவர்களிடம் ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் பால், ரொட்டி உள்ளிட்ட உணவுப்பொருட்கள், அத்தியாவசியப் பொருட்களையும் அவர்களுக்கு வழங்கினார்.