மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற முடியாது என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்து விட்டதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஆகியோர் டெல்லியில் கூட்டாக பேட்டி அளித்தனர்
மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாயா டெல்லியில் நேரில் சந்தித்த பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஆகிய இருவரும் தமிழகத்தின் வளர்ச்சி விவகாரங்களில் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்வதாக குற்றம் சாட்டினர்.
பல மாநிலங்களில் ஒரு சர்வதேச விமான நிலையம் கூட இல்லாத சூழலில் தமிழகத்தில் ஏற்கனவே 3 சர்வதேச விமான நிலையங்கள் இருப்பதால் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற இயலாது என அமைச்சர் கூறிவிட்டதாகவும், இது நியாயமே இல்லாத காரணம் என இருவரும் கூறினர்.
அதேபோல், வெளிநாட்டு விமானங்கள் மதுரை விமான நிலையத்துக்கு வருவது தொடர்பான ஒப்பந்தம் (point of call ) போட முடியாது என அமைச்சர் கூறிவிட்டதாகவும், மஸ்கட், அபுதாபி, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நான்கு நாடுகளுடன் மதுரை விமான நிலையத்திற்கு விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதாகவும் அவர்கள் கூறினர்.
வாரணாசி, திருப்பதி உள்ளிட்ட நகரங்களுக்கு எல்லாம் சர்வதேச விமான நிலையம் இருக்கும் பொழுது, அதை விட 10 மடங்கு அதிக பயணிகளை கையாளக்கூடிய மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அங்கீகாரம் தர மறுப்பது தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்கும் திட்டம் எனவும் இருவரும் சாடினர்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News