பல மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்த ஏ10 கிரேடு ரவுடி மற்றும் அவரது கூட்டாளியை வடமாநிலத்திற்குச் சென்று ரவுடிகள் ஒழிப்பு தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலா என்ற மதுரை பாலா. ஏ10 கிரேடு ரவுடியான இவர் மீது கொலை, ஆட்கடத்தல் உட்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. கூலிப்படை தலைவனான பாலா இருந்த இடத்திலேயே ஸ்கெட்ச் போட்டு கூலிப்படையை ஏவி கொலை செய்து வந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
முக்கிய ரவுடியான மயிலாப்பூர் சிவகுமார் உட்பட சில கொலை வழக்குகளில் தொடர்புடைய பாலா நீதிமன்றத்தில் சரணடைவதை வாடிக்கையாக செய்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பல மாதங்களாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் பாலா தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் தலைமறைவாக இருந்து வந்த ரவுடி பாலா மற்றும் அவரது கூட்டாளியான சிவா, மதன் ஆகிய 3 பேரை ரவுடிகள் ஒழிப்பு தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். டிரான்சிட் வாரண்ட் பெற்று கொண்டு கைது செய்யப்பட்ட மூவரையும் சென்னைக்கு அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள ரவுடி மதுரை பாலா பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், தமிழக காவல்துறை தொடர்ந்து தங்களுக்கு தொல்லை கொடுத்து வருவதாகவும், தங்களது கை, கால் உடைக்கப்பட்டலோ அல்லது உயிருக்கு பாதிப்பு ஏற்பட்டாலோ அதற்கு முக்கிய காரணம் தமிழக காவல்துறை என மதுரை பாலா கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News