கூட்டணி அறத்தை காக்க வேண்டும் என்ற தமது கோரிக்கையை திமுக ஏற்றதற்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சிகளில் தலைமைப்பொறுப்புக்கான தேர்தலில் ஏற்பட்ட குழப்பங்கள் தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கை உணர்ச்சிப்பூர்வமாகவும் முதிர்ச்சி நிறைந்ததாகவும் இருந்ததாக திருமாவளவன் தன் அறிக்கையில் கூறியுள்ளார். சில இடங்களில் நடந்த அத்துமீறல்களுக்கு திமுக தலைமை காரணமில்லை என்றபோதும் அதனை சீர்செய்ய வேண்டிய பொறுப்பை உணர்ந்து முதல்வர் ஆற்றியுள்ள எதிர்வினை மிகுந்த ஆறுதலையும் நம்பிக்கையையும் அளிப்பதாக விசிக தலைவர் கூறியுள்ளார். தனது செயல்மூலம் கூட்டணியை உறுதி குலையாமல் முதல்வர் காத்துள்ளார் என்றும் திருமாவளவன் கூறியுள்ளார். வருங்காலங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தலைமைப்பொறுப்பில் அமர்பவர்களை மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் எனவும் திருமாவளவன் தன் அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News