பொள்ளாச்சியில் மூதாட்டியை படுகொலை செய்த வழக்கில் திடீர் திருப்பம். காதல் திருமணம் செய்ய பணம் இல்லாததால், 17 வயது சிறுமி மூதாட்டியின் கழுத்தை நெரித்து கொலை செய்து 15 சவரன் நகையை திருடியது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.
பொள்ளாச்சி மாரியப்பன் வீதியைச் சேர்ந்தவர் மூதாட்டி நாகலட்சுமி (72). இவருக்கு செந்தில்வேல் என்ற மகனும் இரண்டு மகள்களும் உள்ள நிலையில், தனது மகனுடன் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை செந்தில் வேல் வழக்கம்போல் வேலைக்குச் சென்றுள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் செந்தில்குமார், வீட்டில் வந்து பார்த்தபோது அவரது தாயின் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு கழுத்த்தில் இருந்த 15 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்த போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் அங்கு விரைந்து வந்த மேற்கு காவல்நிலைய போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், 17 வயது சிறுமி ஒருவர் வீட்டுக்குள் சென்று ஒருமணி நேரமாக திரும்பி வராதது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த சிறுமியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது தான் காதலித்த இளைஞரை திருமணம் செய்வதற்காக பணம் தேவைப்பட்டது, அதற்காக மூதாட்டியை கொலை செய்து நகையை திருடிச் சென்றதாக சிறுமி ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து சிறுமி மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரை கைது செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிறுமி திருடிய 15 சவரன் நகை அவரது வீட்டிலிருந்து மீட்கப்பட்டது. காதல் திருமணம் செய்ய பணம் இல்லாததால் 17 வயது சிறுமி மூதாட்டியின் கழுத்தை நெரித்து கொலை செய்து 15 சவரன் நகையை திருடிய சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News