நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மசோதாவை அனுப்பிவைத்தால் அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான மோதல்போக்கு சற்று குறையக்கூடும்.
மருத்துவப்படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்கக்கோரி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனை இந்த ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பியனுப்பியிருந்தார். எனினும் நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதில் உறுதியாக இருந்த தமிழக அரசு, பிப்ரவரி 8ஆம் தேதி மீண்டும் மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது.
மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வலியுறுத்தியபோதிலும் எந்த முன்னேற்றமும் இல்லாததால் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்தது தமிழக அரசு. சட்டமன்ற மாண்பையும் மக்களையும் ஆளுநர் மதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை பகீரங்கமாகவே அரசு முன்வைத்தது. ஆளும் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேட்டிலும் ஆளுநரை விமர்சித்து கட்டுரைகள் வெளிவந்தன. இந்த சூழலில் நீட் விலக்கு மசோதா தொடர்பான தமது பரிசீலனை மற்றும் குறிப்பெழுதும் பணிகள் நிறைவுபெற்றதால் அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான விவரங்களை முதலமைச்சரின் அலுவலகத்திற்கு முறைப்படி தெரிவிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
நீட் விலக்கு, கூட்டுறவு சங்க சட்டத்திருத்தம் உட்பட மொத்தம் 11 மசோதாக்கள் மற்றும் கடிதங்கள் ஆளுநர் முன் நிலுவையில் உள்ளன. பெரிதும் எதிர்பார்க்கப்படும் நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்தால் அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான மோதல்போக்கு சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News