நோ பார்க்கிங்கில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தால் அதை படம் பிடித்து அனுப்புவோருக்கு வெகுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நோ பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்துவோருக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்தார். நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை படம் எடுத்து உரிய அதிகாரிகளுக்கு அனுப்புவோருக்கு 500 ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என்றும் கூறினார். தவறான பார்க்கிங் என்பது கவனிக்கப்படாமல் போவது ஒரு பெரிய பிரச்னை என்றும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
நாட்டின் நகர்ப்புறங்களில் வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. சில நேரங்களில் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் கார் இருக்கும் என்றும், அவர் குறிப்பிட்டார். அதற்கேற்ப பார்க்கிங் இடங்களை அமைக்காமல் சாலைகளை ஆக்கிரமித்து வாகனங்ளை நிறுத்துவதற்கு அவர் கவலை தெரிவித்தார். மேலும் நாக்பூரில் உள்ள தனது சொந்த வீட்டை உதாரணமாகக் காட்டி, தனக்கு 12 பார்க்கிங் இடங்கள் இருப்பதாகவும், தனது கார்கள் எதுவும் சாலையோரத்தில் நிறுத்தப்படுவதில்லை என்றும் கூறினார்.
டெல்லியில், மக்கள் சாலைகளை தங்கள் பார்க்கிங் இடமாக கருதுகிறார்கள் என்று கட்கரி குறிப்பிட்டார். இருப்பினும், போக்குவரத்து அமைச்சர் இதை நகைச்சுவைக்காக மட்டுமே சொன்னாரா அல்லது தீவிரமாக பின்பற்ற அறிவுறுத்தினாரா என்பது தெரியவில்லை.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News