குப்பைகள் எரிப்பால் மூளும் புகை மண்டலம்.. புற்றுநோய்க்கு ஆளாகும் மணவாளக்குறிச்சி மக்கள்

மணவாளக்குறிச்சி பேரூராட்சியில் உள்ள கழிவுகளை கடற்கரை பகுதியிலேயே கொண்டுவந்து கொட்டி பேரூராட்சி நிர்வாகம் எரித்துவருவதாகவும், இதனால் பொதுமக்கள் பாதிப்புள்ளாவதாக புகார் கொடுத்தும் பேரூராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என வருத்தம் தெரிவிக்கின்றனர். 
குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி பேரூராட்சி பகுதிகளில் இருந்து பேரூராட்சி நிர்வாகம் அள்ளி எடுக்கும் குப்பைகளை தரம் பிரிக்காமல் பேரூராட்சிக்கு உட்பட்ட கடியப்பட்டணம் கடற்கரை பகுதியில் கொண்டுவந்து கொட்டுவதுடன் அங்கு வைத்தே இந்த குப்பைகளை எரித்து வருகிறது. அதில் குறிப்பாக பிளாஸ்டிக், மருத்துவ கழிவுகள், துணிகள் என பல்வேறு வகையிலான குப்பைகளையும் மலைபோல் குவித்து எரிப்பதால் இந்த பகுதி மக்கள் புகையால் கண் எரிச்சல், மூச்சுத்திணறல், இருமல் உட்பட பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
image
அதேபோல் மாவட்டத்திலேயே இந்த பகுதிதான் அதிக புற்றுநோய் பாதிக்கப்பட்ட பகுதியாக உள்ளதால் இந்த பகுதிகளிலிருந்து சிகிச்சை பெற்றுவரும் புற்றுநோயாளிகள், இருதய நோயாளிகளும் மிகவும் அவஸ்தைக்குள்ளாகி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இந்த பகுதி மக்கள் மணவாளக்குறிச்சி பேரூராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து புதிய தலைமுறை பலமுறை செய்தி வெளியிட்டதுடன், பொதுமக்களின் குற்றச்சாட்டு குறித்து அதிகாரிகளிடம் கேட்டது.
image
அதற்கு, பேரூராட்சி அதிகாரிகள், பேரூராட்சி இங்கு குப்பைகளை கொண்டுவந்து கொட்டியிருந்தாலும், நாங்கள் அதை தீவைத்து எரிக்கவில்லை என்ற பதிலையே அளித்ததுடன் இனிமேல் இங்கு குப்பைகளை எரிக்காமல் இருப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்து வந்தனர். ஆனால் அவர்களது வாக்குறுதி இன்றுவரை வெறும் வாய்ப்பேச்சாகவே இருந்து வருகிறது.
image
இந்த நிலையில் இன்று காலையில் இந்த கடற்கரை பகுதியில் கொண்டு குவித்திருந்த டண் கணக்கான குப்பைகளை பேரூராட்சி ஊழியர்களே தீவைத்து எரிக்க துவக்கினர். அங்கிருந்து உருவான புகைமூட்டம் அந்த பகுதியைச்சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளை சூழ்ந்ததால் அந்த பகுதி மக்கள் தங்களது வீடுகளிலோ, அருகிலுள்ள தோப்புகளிலோ இருக்க முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் புதிய தலைமுறைக்கு தகவல் தெரிவித்தனர்.
image
அதனைத்தொடர்ந்து புதிய தலைமுறை இன்று மாலை அந்த பகுதிக்கு சென்று கள ஆய்வு நடத்தியது. அப்போது பேரூராட்சி நிர்வாகம், வாகனத்தில் ஆயிரம் லிட்டர் டேங்கில் தண்ணீரை கொண்டுவந்து மலைபோல் குவித்து எரித்த குப்பையில் நீரை ஊற்றி தீயைய் அணைத்து வருவதை பார்க்க முடிந்தது. இருப்பினும் அதுவரை எரிந்த தீயால் ஏற்பட்ட புகைமூட்டம் குடியிருப்புகளுக்குள் அதீத பாதிப்பை ஏற்படுத்தி இருந்ததை பார்க்கமுடிந்தது. 
image
இந்த பகுதியில் பல்வேறு நோய்களால் சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக குப்பைகளை கொண்டுவந்து கொட்டி பொதுமக்களுக்கு இடையூறை ஏற்படுத்தி மக்களை நோயாளிகளாக மாற்றிவரும் பேரூராட்சி அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் இந்த பகுதியில் நாளைமுதல் குப்பையை கொட்டாமல் இருக்க மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை அப்பகுதி மக்கள் முன்வைத்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post