தமிழ் புத்தாண்டையொட்டி அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் என்.ஆர்.ரவி அளிக்கவிருக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் குரலையும், தமிழக மக்களின் கோரிக்கைகளையும் முற்றாக நிராகரிப்பதோடு, அரசுக்கு மேலானதொரு அதிகார மையமாக செயல்பட தொடர்ச்சியாக ஆளுநர் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், தமிழக சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் எதிர்ப்பு மசோதா உள்ளிட்டவற்றை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்காமல் தமிழக சட்டமன்றத்தின் மாண்பை சிறுமைப்படுத்தும் நடவடிக்கைகள், துணைவேந்தர் நியமன பிரச்சனை, இந்தியாவின் பன்மைத்துவத்தை நிராகரிக்கும் உரை போன்ற நடவடிக்கைகளால் தமிழக மக்களின் உணர்வுகள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் ஆளுநர் அவர்கள் அளிக்கும் தேநீர் விருந்தில் எங்களது கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட யாரும் பங்கேற்பதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் தேநீர் விருந்து புறக்கணிப்பு தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், " நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் வைத்திருக்கும் ஆளுநரின் செயலை கண்டித்து இந்த தேநீர் விருந்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி புறக்கணிக்கிறது.
தமிழர் உணர்வுகளை அவமதிக்கும் வகையில் செயல்பட்டு வரும் ஆளுநர் அவர்கள் சித்திரை நாள் தேநீர் விருந்துக்கு அழைப்பது தமிழகத் தலைவர்களைக் கேலி செய்வதாகவுள்ளது. நீட் விலக்கு மசோதாவைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் காலம் கடத்தும் நிலையில் அவர் அழைப்பை எங்ஙனம் ஏற்க இயலும்?. சனாதனக் கருத்தியலின் பரப்புநராகச் செயல்படும் ஆளுநர் அவர்கள், சமூகநீதிக் கருத்தியலைச் சிதைக்கும் வகையில்தான் ஏற்கனவே நீட் விலக்கு மசோதாவைத் திருப்பி அனுப்பினார். அடுத்து நிறைவேற்றப்பட்ட அதே மசோதாவை இன்னும் கிடப்பில் போட்டிருக்கிறார். இந்நிலையில் அவரது அழைப்பை எவ்வாறு ஏற்க இயலும்?. நீட் விலக்கு மசோதாவைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு விரைந்து அனுப்பி வைக்குமாறு வலியுறுத்துகிறோம்" என தெரிவித்தார்
ஆளுநரின் தேநீர் விருந்தினை புறக்கணிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் அறிவித்துள்ளனர். மேலும், ஆளுநர் அழைப்பு விடுத்திருக்கும் தேனீர் விருந்தில் கலந்துகொள்வது தொடர்பாக திமுக என்ன முடிவு எடுக்கிறதோ அதனை ஒட்டியே காங்கிரஸின் முடிவு இருக்கும் என காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித்தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News