தமிழகத்தில் கடந்த 8 மாதங்களில் ஆயிரத்து 689 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நிலங்கள் ஆக்கிரப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களைப் பராமரிக்கவும், அங்கு பக்தர்களின் வசதிகளை மேம்படுத்தவும், முதலமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவின் ஆலோசனைக் கூட்டம் நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது. கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக, தமிழ்நாடு முழுவதும் முக்கிய கோயில்களை கண்காணிக்கும் வகையில், இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதன் மூலம் கோயில்களின் சிசிடிவி கேமரா பதிவுகளை ஒருங்கிணைத்து 24 மணி நேரமும் கண்காணிக்க முடியும். அதன் பின்னர் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் , கடந்த 8 மாதங்களில் இந்து சமய அறநிலையத்துறையில் செய்யப்பட்ட சாதனைகளை பட்டியலிட்டார். அன்னைத் தமிழில் அர்ச்சனை, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தில் 58 அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.