பெரம்பலூர்: அடக்கம் செய்த தாயின் சடலத்தை தோண்டி எடுத்து வீட்டில் வைத்திருந்த மகன்

பெரம்பலூர் அருகே அடக்கம் செய்யப்பட்ட தாயின் சடலத்தை தோண்டி வீட்டிற்கு கொண்டுவந்த மகனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் பரவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் (38). இவரது தந்தை சிறு வயதிலேயே இறந்துவிட்டதால், தாய் மூக்காயி அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளார். இடையில் மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பாலமுருகன், எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு தாய் மூக்காயி உயிரிழந்து விட்டார். இதனைத் தொடர்ந்து மனநலம் பாதிக்கப்பட்டவராக காணப்பட்ட பாலமுருகன், தாயை அடக்கம் செய்த சுடுகாட்டு பகுதியில் அதிகம் நடமாடியுள்ளார். மழை பெய்தபோது தாய் புதைக்கப்பட்ட சமாதியை ப்ளக்ஸ் பேனரை வைத்து மூடியதோடு, பல நாட்கள் சமாதி மேலேயே தூங்குவதுமாக இருந்துள்ளார்.

image

இதைத் தொடர்ந்து நேற்று மாலை உறவுக்கார பெண் ஒருவர் பாலமுருகனுக்கு உணவு கொடுக்கச் சென்றுள்ளார். அப்போது மிகுந்த துர்நாற்றம் வீசியுள்ளது. பாலமுருகனிடம் கேட்டபோது ஒன்றுமில்லை என வெளியே போக சொல்லியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த உறவுக்கார பெண், அருகில் இருந்தவர்களிடம் கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு மூக்காயி சடலம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு சென்ற குன்னம் போலீசார், சடலத்தை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 87 நாட்களாக சிறிது சிறிதாக தோண்டி தாயின் சடலத்தை குப்பை வண்டியில் வைத்து நள்ளிரவில் வீட்டிற்கு எடுத்து வந்ததாக பாலமுருகன் புதியதலைமுறைக்கு பேட்டியளித்தார்.

மீட்கப்பட்ட உடலை மீண்டும் புதைத்தால் பாலமுருகன், தோண்டி எடுக்க வாய்ப்பிருப்பதால், அதனை எரியூட்டுவதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்து வருவதாக கூறப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



Post a Comment

Previous Post Next Post