56வது கோவா சர்வதேசப் படவிழா | ரஜினியுடன் 3 தமிழ்ப் படங்கள்!

கோவாவில் நாளை தொடங்கிறது 56வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழா (IFFI). வரும் 28ஆம் தேதி வரை நடைபெறும் இப்படவிழாவில் இதில் 81 நாடுகளைச் சேர்ந்த 240 படங்கள் திரையிடப்படுகின்றன. திரைப்பட இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா தலைவராக உள்ளார். இந்த விழாவின் தொடக்க விழாவின் உலக சினிமா பிரிவின் ‘ஓபனிங் பிலிம்’ ஆக கேப்ரியல் மஸ்காரோவின் ‘தி ப்ளூ டிரெயில்’ என்றப் படம் திரையிடப்படுகிறது. 1975இல் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலம் அறிமுகமான ரஜினிகாந்த், திரையுலகில் ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்துள்ள கலைச் சாதனைக்காக விழாவில் கௌரவம் செய்யப்பட உள்ளார்.

’ஆநிரை’ படத்தில் ஒரு காட்சி

ரஜினி கௌரவம் செய்யப்படும் அதேவேளையில்,இப்படவிழாவில் 3 தமிழ்ப் படங்கள் தமிழ் சினிமாவுக்குப் பெருமை சேர்க்க இருக்கின்றன. அவற்றில் ‘தங்க மயில்’ விருதுக்கான சர்வதேசப் போட்டிப் பிரிவில், சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ இடம் பிடித்துள்ளது. கமல் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இப்படம் படவிழாவின் ‘ஓபனிங் பிலிம்’ ஆக, திரையிடப்படுகிறது. விருதுக்கு இணையான கெளரமாகக் கருதப்படும் மற்றொரு பிரிவு ‘இந்தியன் பனோரமா’ திரையிடல். இப்பிரிவுக்கு இ.வி.கணேஷ்பாபு இயக்கிய ‘ஆநிரை’, ராஜு சந்திரா இயக்கிய ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ ஆகிய தமிழ்ப் படங்கள் தேர்வுபெற்று இன்று திரையிடப்படுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post