சென்னை: ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘டிராகன்’ படத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர், மிஷ்கின், கே.எஸ்.ரவிக்குமார், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள இப்படத்துக்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். பிப்ரவரி 21-ம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (பிப்.13) சென்னையில் நடைபெற்றது. இதில் மிஷ்கின் படக்குழுவினர் குறித்து பேசிய பிறகு ‘பேட் கேர்ள்’ பட சர்ச்சை குறித்து பேசினார். அவர் பேசியதாவது: “பேட் கேர்ள்’ படம் எடுத்தது ஒரு பெண். ட்ரெய்லரை வைத்து ஒரு படத்தை முடக்குவதில் நியாயமே இல்லை. அதிலும் ஒரு பெண் எடுத்த ஒரு படத்தை வெளிவர விடாமல் தடுக்கிறார்கள். ஒரு பெண் கலங்குவது என் மனதை உறுத்திக் கொண்டே இருக்கிறது. சினிமாவில் இருப்பவர்கள் எல்லாரும் சேர்ந்து அரசியல்வாதிகளிடம் பேசி சென்சாரில் கட் செய்ய வேண்டியவற்றை கட் செய்து அந்த படத்தை எப்படியாவது கொண்டு வர வேண்டும். ஒரு பெண் இயக்குநர் ஆவது மிகவும் முக்கியமான ஒன்று” இவ்வாறு மிஷ்கின் பேசினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்