
எம்எஸ் தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கடந்த 2019-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்த அவர், 2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையையும், அதன் பின்னர் அடுத்த 4 ஆண்டுகளில் 50 ஓவர் உலகக் கோப்பையையும் இந்திய அணிக்கு வென்று கொடுத்தார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்று கிட்டத்தட்ட 4 வருடங்கள் ஆகிறது. ஆனாலும் 41 வயதான அவர், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எழுச்சியுடன் விளையாடி வருகிறார். இந்த சீசனில் தன்னை தானே புதுப்பித்துக்கொண்டு பின்வரிசை பேட்ஸ்மேனாக களமிறங்கி கடைசி 3 ஓவர்களை மட்டும் குறிவைத்து எதிரணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்குகிறார்.
ஆடுகளத்தில் சமயோஜிதமாக செயல்படுவதில் அசத்தும் தோனி, பேட்டிங் வரிசையில் 8-வது வீரராக களமிறங்கி அணிக்கு பயன்படக்கூடிய வகையில் சில பங்களிப்புகளை வழங்கி வருகிறார். பின் வரிசையில் அவர், வெளிப்படுத்தி வரும் செயல்திறனால், இந்த சீசனில் சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றை நெருங்கி உள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம் டெல்லி அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் தோனி 9 பந்துகளை சந்தித்து 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு 20 ரன்கள் சேர்த்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்