பேரூர் பெரியக்குளக்கரையில கொட்டப்பட்ட  மருத்துவக்கழிவுகள் - விவசாயம் பாதிக்கப்படும் அபாயம்

கோவை மாவட்டம் பேரூர் பெரியக்குளக்கரையில் மருத்துவக்கழிவுகளை கொட்டியவர்களுக்கு ரூபாய் 5 ஆயிரம் மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில், பல்லுயிர் சூழல், நிலத்தடி நீர், விவசாயம் உள்ளிட்ட உயிர்ச்சூழல் சிதையாமல் இருப்பதற்கு மருத்துவக்கழிவுகளை கொட்டுவோருக்கு அதிகபட்ச அபராதத்துடன், சட்டரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 
கோவை மாவட்டம் புட்டுவிக்கியில் இருந்து கோவைப்புதூர் செல்லும் சாலையில் பேரூர் பெரியக்குளம் அமைந்துள்ளது. 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த குளத்தில் அரியவகை பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள் வசித்து வருகின்றன. மாவட்டத்தின் முக்கிய குளங்களில் ஒன்றான இந்த பேரூர் பெரியகுளத்தில் பேரூர் கோயில் செல்லும் சாலையின் ஓரத்தில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டிருந்தது. அதில் காலாவதியான, காலாவதியாகாத மாத்திரைகள், சொட்டு மருந்துகள், சத்து பவுடர்கள், கண்ணாடி பாட்டில்கள் இருந்தன.
3 இடங்களில் ஆங்காங்கே குவியலாக கொட்டப்பட்டிருந்த மருத்துவக்கழிவுகள் தொடர்பாக கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் பேரூர் பேரூராட்சியில் புகார் அளித்தனர். அந்த கழிவுகளிலிருந்து நிறுவனத்தின் பெயர் பதிவுசெய்யப்பட்ட ரசீதுகளை(Bills) பேரூராட்சியிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து கொட்டப்பட்ட மருத்துவக்கழிவுகளை அகற்றிய பேரூர் பேரூராட்சி நிர்வாகம், கழிவுகள் கொட்டிய வாகன ஓட்டுனருக்கு ரூபாய் 5 ஆயிரம் அபராதம் விதித்தது.

image
ஆனால், சுற்றுச்சூழலுக்கும், மனிதர்களுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய மருத்துவக்கழிவுகளை நீர் நிலைகள் போன்ற பொது இடங்களில், கழிவுகள் கொட்டிய நிறுவனத்தின் மீது காவல்துறை மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறும், உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக அதிகப்பட்ச அபராதத்தொகையை விதிக்குமாறும், சுகாரத்துறை மூலம் துறைரீதியான தக்க நடவடிக்கை எடுக்குமாறும், கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் கோவை மாவட்ட கண்காணிப்பாளர் (ஊரகம்) அவர்களுக்கு புகார் மூலம் கோவை குளங்கள் பாதுகாப்பபு அமைப்பினர் கடிதம் அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த மணிகண்டன் பேசுகையில், “இதுபோன்ற மருத்துவக்கழிவுகள் இக்குளக்கரையில் கொட்டப்படுவது 2வது முறையாகும். இக்குளத்தைச் சார்ந்து சுமார் 10 கிலோமீட்டருக்கு நிலத்தடி நீர் மட்டுமின்றி தென்னை, வாழை, பாக்கு என விவசாயமும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

image
கடந்த சில ஆண்டுகளாகவே கோவையின் எல்லைப்பகுதிகளில் வெளி மாநில மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுவதும், விவசாய நிலங்கள் குப்பைக்கிடங்காக சட்ட விரோதமாக மாறி வரும் சம்பவங்களும் அதிகளவு நடந்து வருகிறது. சம்பவம் நடைபெறும்போது மிக சொற்ப அபராதத்துடன் மருத்துவக்கழிவுகள் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் நிலையில், அதற்கான உரிய சட்ட ரீதியான நடவடிக்கை மட்டுமே இதுபோன்று சூழலியலுக்கு கேடு விளைவிக்கும் செயலில் ஈடுபடுவோருக்கான உரிய தண்டனையாக மட்டுமின்றி, மருத்துவக்கழிவுகள் சுகாதாரமற்ற முறையில் கொட்டப்படுவது தடுக்கப்படும்” என்றார்.
இதுகுறித்து பேச மாவட்ட ஆட்சியரை தொடர்புக்கொள்ள மாவட்ட ஆட்சியரை முயற்சித்தும் அது முடியாமல்போனது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post