மருத்துவக் கழிவுகளை கொண்டுவந்து தமிழ்நாட்டில் கொட்டுவதை தடுக்க வேண்டும் - நீதிமன்றம்

பிற மாநில மருத்துவக் கழிவுகளை தமிழ்நாட்டில் கொண்டுவந்து கொட்டுவதை முற்றிலும் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தென்காசியைச் சேர்ந்த சிதம்பரம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அதில், 'நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மருத்துவக் கழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது. இதை தடுக்க வேண்டும் என கடந்த 2018 ஆண்டு பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணையின் போது அப்போது நெல்லை மாவட்ட ஆட்சியராக இருந்த ஷில்பா தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யபட்டது. அதில், நெல்லை மாவட்ட ஆட்சியர் தலைமையில் சுகாதாரத் துறை, காவல்துறை, போக்குவரத்து துறையின் அலுவலர்களை இணைத்து மேலாண்மை குழு அமைக்கபட்டு மருத்துவக் கழிவுகள் நெல்லை மாவட்டத்திற்குள் நுழையாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. என பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

image

ஆனால், கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகளை கொண்டுவந்து தமிழ்நாட்டில் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது. எனவே, மருத்துவக் கழிவுகள் கொட்டுவதை தடுக்காத நெல்லை மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஜெயசந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

தமிழ்நாடு சுகாதாரத் துறையின் முதன்மை செயலாளர் செந்தில் நாதன் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அறிவிப்புபடி மாவட்டங்களில் மருத்துவக் கழிவுகள் கொட்டுவதை தடுக்கும் கண்காணிப்புக் குழு மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

image

கேரளாவில் இருந்து தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்கள் வழியாக வருவதற்கு கோவை மாவட்டத்தில் 14 வழிகளும், கன்னியாகுமரியிலிருந்து 15 வழிகளும், தேனி மாவட்டம் வழியாக வருவதற்கு 3 வழித் தடங்களும், தென்காசி மாவட்டம் வழியாக வருவதற்கு 2 வழித் தடங்களும் உள்ளன. எல்லையோர மாவட்டங்களில் உள்ள இந்த வழித் தடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, சிசிடிவி கேமரா மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவக் கழிவுகளை சட்டவிரோதமாக கொண்டு வந்து எல்லையோர மாவட்டங்களில் கொட்டுவது தொடர்பாக கோவை, கன்னியாகுமரி, தேனி, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் சமீபத்தில் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. 2022 - 2023 ஆம் ஆண்டுகளில் தென்காசி மாவட்டத்தில் கேரளாவிலிருந்து மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்து கொட்டியதாக 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது .

image

எனவே, தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தில் தான் தொடர்ந்து கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. தென்காசி மருத்துவக் கழிவுகளை கொட்டும் இடமாக மாறி வருகிறது. கண்காணிப்புக் குழு நியமித்து எல்லையோர மாவட்டங்களில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுகிறதா என தொடர்ந்து தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பப் பட்டு வருகிறது. என பதில் மனுவில் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து நீதிபதிகள், தமிழகத்தில் பிற மாநில மருத்துவக் கழிவுகள் கொட்டுவதை முற்றிலும் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post