கிருஷ்ணகிரி: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – ஆசிரியர் உட்பட இருவர் சஸ்பெண்ட்

பர்கூர் அருகே அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இரண்டு ஆசிரியர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள இரண்டு ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் பள்ளியில் 8 ஆம் வகுப்பு பயிலும் ஒரு மாணவியை அப்பள்ளியில் வரலாறு ஆசிரியராக பணிபுரியும் ராஜா (59) என்பவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.

மேலும் அதே வகுப்பில் படித்து வரும் மற்றொரு மாணவியை ஆய்வக உதவியாளர் நடேசன் (59) என்பவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து அந்த இரண்டு மாணவிகளும் தங்களது பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளிக்குச் சென்று ஆசிரியர் மற்றும் ஆய்வக உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்க பள்ளி நிர்வாகத்திடம் கூறியுள்ளனர்.

image

ஆனால், பள்ளி நிர்வாகம் இது பெரிய விஷயம் இல்லை, இது பற்றி வெளியில் தெரிந்தால் பள்ளிக்கு அவப்பெயர் வந்துவிடும். அதனால் இதை பெரிதுபடுத்த வேண்டாம் எனக் கூறி மாணவிகளின் பெற்றோர்களிடம் சமாதானம் பேசி அனுப்பி வைத்தாகக் கூறப்படுகிறது. பின்னர் இந்த சம்பவம் குறித்து மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று எழுத்து பூர்வமாக பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். புகாரையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் சிவகாந்தி தலைமையிலான குழுவினர், பள்ளிக்குச் சென்று நேரடியாக விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மற்றும் ஆய்வக உதவியாளர், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதையடுத்து மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலக சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் ரகுராமன், பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை குறித்து புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வரலாறு ஆசிரியர் ராஜா மற்றும் ஆய்வக உதவியாளர் நடேசன் ஆகிய இருவரும் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள இரண்டு பேரையும் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் பாலியல் தொல்லை வழக்கில் ஆசிரியர்கள் மீது போக்சோ சட்டம் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் இருவரையும் தற்காலிக பணியிட நீக்கம் செய்யப்பட்டனர். 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு ஆசிரியர்கள் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post