மனைவி இறந்த துக்கத்தில் கணவன் எடுத்த விபரீத முடிவு – ஆவடியில் சோகம்

ஆவடியில் உடல்நலக் குறைவு காரணமாக மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி, பக்தவச்சலபுரம், ஜோதி இராமலிங்கம் தெருவைச் சேர்ந்தவர் முத்துவீரன் (77). இவரது மனைவி சரஸ்வதி (65). இந்த தம்பதியினர் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில், இவர்களது வீட்டையொட்டி மகன் தணிகைவேல் (35) என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதற்கிடையில், சரஸ்வதி உடல்நலக் குறைவு காரணமாக தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

image

இதையடுத்து கடந்த வாரம் அவரை உறவினர்கள் வீட்டுக்கு அழைத்து வந்தனர். இந்த நிலையில், கடந்த புதன்கிழமை இரவு சரஸ்வதி படுக்கை அறையில் உயிரிழந்தார். இதை பார்த்து மனமுடைந்த முத்துவீரன் நள்ளிரவில் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை காலை பெற்றோர் வீட்டுக்கு தணிகைவேல் வந்து பார்த்தபோது, அம்மா சரஸ்வதி படுக்கை அறையில் இறந்து கிடந்த நிலையில், தந்தை முத்துவீரன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

image

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி போலீசார், சடலத்தை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகார் அடிப்படையில் காவல் ஆய்வாளர் டெல்லி பாபு தலைமையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி இறந்த துக்கம் தாங்காமல், கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆவடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post