மதுரை மக்கள் செங்கல்லை எடுப்பதற்கு முன் எய்ம்ஸ் பணியை தொடங்கிவிடுங்கள்!-உதயநிதி ஸ்டாலின்

மதுரை மாவட்ட மக்கள் செங்கல்லை எடுக்கும் முன்பு மத்திய அரசு மதுரையில் எய்ம்ஸ் பணியை தொடங்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் தமிழக அரசில் பணியாற்றும் IAS, IPS அலுவலர்கள் மற்றும் மத்திய அரசு அலுவலர்கள் பங்கேற்கும் 2022-2023ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் போட்டியினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த கிரிக்கெட் போட்டியில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ், ஐ.ஆர்.எஸ், ரயில்வே மற்றும் வருமான வரித்துறை ஆகிய 6 அணிகள் விளையாடுகிறது. இன்று தொடங்கி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இந்த கிரிக்கெட் போட்டி நடைபெறவிருக்கிறது. இறுதியாக மார்ச் 12ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.

image

இன்று நடைபெறும் போட்டியில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அணிகள் விளையாடுகின்றன. முன்னதாக நிகழ்ச்சியை தொடங்கி வைப்பதற்கு முன்பு 6 அணி தலைவர்கள் மற்றும் இன்று விளையாட உள்ள 2 அணி வீரர்களுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து மைதானத்திற்கு உள்ளே சென்று டாஸ் போட்டு போட்டியை தொடங்கி வைத்த உதயநிதி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி பந்து வீச, உதயநிதி பேட்டிங் செய்து வந்திருந்தவர்களை குதூகலப்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், தமிழக அரசு சார்பாக வருடாவருடம் இந்த போட்டிகள் நடைபெறும், இந்த வருடம் இந்த போட்டியை நான் தொடங்கி வைத்து உள்ளேன். கடந்த ஒன்றரை மாதங்களாக நிறைய விளையாட்டு அரங்கங்களுக்கு சென்று விளையாட்டு வீரர்களின் கோரிக்கையை கேட்டுள்ளேன் அதை அனைத்தும் அதிகாரிகளிடம் பேசி முதல்வரிடம் கோரிக்கையாக வைத்துள்ளேன். கண்டிப்பாக வரும் பட்ஜெட்டில் விளையாட்டுத்துறை மானிய கோரிக்கையில் நல்ல அறிவிப்பு வரும் என்றார்.

image

மேலும் மதுரை எய்ம்ஸ் குறித்து பேசிய அவர், பார்லிமென்ட் வரையும் மதுரை செங்கல் விஷயம் பேசப்படுகிறது. மதுரை மாவட்ட மக்கள் செங்கலை எடுக்கும் முன்பு மத்திய அரசு மதுரையில் எய்ம்ஸ் பணியை தொடங்க வேண்டும் என்று தெரிவித்த அவர், ஈரோடு இடைத் தேர்தலில் கண்டிப்பாக திமுக வெற்றி பெரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post