மாடுகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான உரிய சான்றிதழ்கள் இருந்தால் மட்டுமே ஜல்லிக்கட்டு காளைகளுக்கு சோதனைச்சாவடிகளில் அனுமதி வழங்கப்படும் என மதுரை ஆட்சியர் அனீஷ்சேகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் வரும் 15ஆம் தேதி அவனியாபுரத்திலும், 16ஆம் தேதி பாலமேட்டிலும், 17ஆம் தேதி உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவில், மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கு 9,699 காளைகளும், 5,399 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்துள்ளனர். ஒவ்வொரு ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் 600 ஜல்லிக்கட்டு காளைகள், 300 மாடுபிடிவீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
ஆன்லைனில் பதிவு செய்த தகுதி வாய்ந்த காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் தங்களுக்கான டோக்கனை பதிவிறக்கம் செய்து வருகின்றன். இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்காக காளைகளை வாகனங்களில் கொண்டு செல்லும்போது உரிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் உத்தரவிட்டுள்ளார்.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளை வாகனங்களில் கொண்டு வரும்போது உரிய சான்றிதழ் மற்றும் விபரங்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ள ஆட்சியர், காளை பரிசோதனை சான்றிதழ், காளை இனம் தொடர்பான சான்றிதழ், காளை கொண்டு செல்லும் வாகன பதிவு சான்றிதழ், காளையின் வயது குறித்த சான்றிதழ், காளை எந்த இடத்தில் இருந்து எந்த இடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்த விபரம், காளைக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது தொடர்பான சான்றிதழ் அவசியமாக வைத்திருக்க லேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்வதற்காக வாகனங்களில் காளைகளை கொண்டு செல்லும் உரிமையாளர்கள் 6 சான்றிதழ்கள் மற்றும் மற்ற விவரங்களை கட்டாயம் உடன் வைத்திருக்க வேண்டும், உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கும் காளை உரிமையாளர்களுக்கு மட்டுமே காவல் சோதனைச்சாவடிகளில அனுமதி வழங்க்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகர் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News