கிருஷ்ணகிரி அருகே புகழ்பெற்ற குந்தாரப்பள்ளி வாரச் சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆடு விற்பனை களைகட்டியுள்ளது.
கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளியில் புகழ்பெற்ற வாரச்சந்தையில் வெள்ளிக்கிழமைதோறும் ஆடு, மாடு, கோழி, விற்பனை நடைபெற்று வருகிறது. தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், மற்றும் கர்நாடகா, ஆந்திரா, ஆகிய பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்பனைக்காக அழைத்து வந்துள்ளனர். செம்மறி ஆடு, வெள்ளாடு, மறிக்கை என சுமார் 10,000 ஆடுகள் விற்பனைக்காக அழைத்து வரப்பட்டுள்ளது.
காலை 5 மணிக்கு துவங்கிய வாரச் சந்தை தற்போது விற்பனை மும்முரமாக களைகட்டி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சென்னை, வேலூர், மதுரை, கோவை, சேலம், திருச்சி, ஈரோடு, பொள்ளாச்சி, விழுப்புரம், கடலூர், ஆகிய மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான கர்நாடகா, பெங்களூர், ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான வியாபாரிகள், பொதுமக்கள் ஆடுகளை வாங்க குவிந்துள்ளனர்.
பண்டிகை காலங்கள் இல்லாத இதர நாட்களில் வழக்கமாக 10 கிலோ எடை கொண்ட ஒரு கிடா ஆடு அதிகபட்சமாக 10,000 முதல் 12,000 வரையிலும், பெண் ஆடுகள் அதிகபட்சமாக 5,000 முதல் 7,000 வரையிலும் விற்பனை ஆகும். தற்போது பண்டிகை முன்னிட்டு அதிக விலையில் ஆடுகள் விற்பனை ஆகிறது. அதன்படி கிடா ஆடு 12,000 முதல் 15,000 வரையிலும், பெண் ஆடு 7000 முதல் 8000 வரையிலும், ஆடுகளின் எடைக்கு ஏற்ப கூடுதல் விலைக்கு விற்பனை ஆகிறது. இதனால் ஆடு வளர்ப்பு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆடுகள் வாங்கிச் செல்லும் வியாபாரிகள் அதிக விலை விற்பதால் ஆட்டு இறைச்சியின் விலை அதிகரிக்கும் என்றும் வழக்கமாக ஒரு கிலோ 800 ரூபாய்க்கு விற்பனை செய்யும் நிலையில் தற்போது பண்டிகை காலங்களில் 1000 ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் எனவும் தெரிவித்தனர்.
சராசரியாக தற்போது பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொதுமக்களும், வியாபாரிகளும், போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்குவதால் விற்பனை அதிகரித்துள்ளது. வாரச்சந்தை நடைபெறும் இடம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள், வியாபாரிகள், பொதுமக்கள், விவசாயிகள் குவிந்துள்ளனர். இன்று ஒருநாள் மட்டும் சுமார் 6,000 முதல் 8,000 வரையில் ஆடுகள் விற்பனை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சராசரியாக ரூபாய் 8 கோடி வரை விற்பனையாகும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News