ஆயுதத்துடன் பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது!

காதலித்து வந்த பெண், காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்தவர், அப்பெண்ணின் வீட்டுக்குச் சென்று கத்தியை காட்டி மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் காமராஜர் நகரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரின் மகன் கௌதம். இவருக்கும் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சாந்தனாதபுரத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கும் கடந்த 2016 முதல் முகநூலில் அறிமுகம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

image

இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு அந்தப் பெண் வேறு ஒரு நபரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக கௌதமிடம் தெரிவித்துள்ளார். இதற்கு கௌதம் எதிர்ப்பு தெரிவித்து தன்னைத் தொடர்ந்து காதலிக்க வேண்டும் என்றும், தன்னை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த வாரம் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று கௌதம் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அந்தப் பெண் வேறொரு நபருடன் இருக்கும் புகைப்படத்தை முகநூலில் அப்பெண்ணே வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கௌதம், பெண்ணின் வீட்டிற்குச் சென்று கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இதனை அடுத்து அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்தப் புகாரை அடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற நகர காவல் துறையினர் கௌதமை கைது செய்து அவர் கையில் வைத்திருந்த கத்தியை பறிமுதல் செய்தனர்.

image

இதைத் தொடர்ந்து அவர் மீது ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுதல், அத்துமீறி வீட்டிற்குள் நுழைதல் உள்ளிட்ட ஆறு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Post a Comment

Previous Post Next Post