எடப்பாடி: ஆதரவற்ற குழந்தைகளை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்து.!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே ஆதரவற்ற பள்ளிக் குழந்தைகளை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 40க்கும் மேற்பட்ட மாணவிகள் காயங்களுடன் எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சின்னமுத்தூரில் இயங்கி வரும் பிருந்தா என்ற ஆதரவற்றோர் தனியார் காப்பகத்தில், 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் எடப்பாடி மற்றும் ரெட்டிபட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். இவர்களை பள்ளிக்கு அழைத்து செல்வதற்காக வாகனம் ஏற்பாடு செய்து, அதன் மூலம் குழந்தைகள் தினந்தோறும் பள்ளிக்குச் சென்று வந்தனர்.

image

இந்த நிலையில் இன்று பள்ளி முடிந்து காப்பகத்திற்கு வாகனத்தில் மாணவிகளை ஏற்றி சென்று கொண்டிருந்தபோது சின்னமுத்தூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலை ஓரத்தில் உள்ள வயல்வெளியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதுமின்றி மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இருந்தபோதிலும் 45க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு காயம் ஏற்பட்டபோதும் காப்பக நிர்வாகம் குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் காப்பகத்திற்கு அழைத்துச் சென்றதால் காயம் அடைந்த மாணவிகள் சிரமத்திற்கு ஆளானார்கள்.

image

சுமார் ஒரு மணி நேர கால தாமதத்திற்கு பிறகு காயம் அடைந்த மாணவிகளை எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனை படம் எடுக்க சென்ற பத்திரிகையாளர்களிடம் படம் எடுக்கக் கூடாது எனக் கூறி காப்பக பெண் நிர்வாகி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

image

இதுகுறித்து எடப்பாடி மற்றும் பூலாம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீஸாரின் விசாரணையில் 25 பேர் செல்லக்கூடிய வாகனத்தில் 50க்கும் மேற்பட்ட மாணவிகளை அழைத்துச் சென்றதே விபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post