
இந்து மதத்தினரை அவதூறாக பேசியதாக திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா மீதான புகாரில் வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 6-ம் தேதி சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு நடைபெற்ற பாராட்டு விழா நிகழ்ச்சியில் பேசிய மத்திய முன்னாள் அமைச்சரும், திமுக துணை பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான ஆ.ராசா இந்து மதம் குறித்து பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஜெ.ஜெ.கட்சியின் நிறுவனர் ஜோசப் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். ஆ.ராசாவின் பேச்சு இரு மதத்திற்கு இடையே விரோதத்தை ஏற்படுத்தி, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ளதாகவும், ராசாவின் பேச்சால் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வழக்கத்தில் இல்லாத மனு நூல் குறித்து பேசி தேவையற்ற பிரச்னைகளை ஏற்படுத்திய ராசா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். ஆனால், ஆளும் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருப்பதால் ராசா மீதான புகாரை காவல்துறையினர் ஏற்றுக்கொள்ளவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். எனவே ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News