பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பான செய்திகளை வெளியிடத் தடை

பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான செய்திகளை அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு பொள்ளாச்சியில் நடைபெற்ற கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம், தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முக்கிய பேசு பொருளாக இருந்தது. 

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் அடையாளங்களை மறைக்காமல், பொது வெளியில் வெளிப்படுத்தியதாக ஊடகங்கள் மீது குற்றம்சாட்டி, இச்சம்பவம் தொடர்பான வழக்கை விசாரிக்கும் சிபிஐ தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

குறிப்பாக வாரம் இருமுறை வெளியாகும் இதழில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் பகிரங்கமாக பொது வெளியில் அம்பலப்படுத்தப்பட்டதாகவும், அந்த பிரதிகளை பறிமுதல் செய்ய உத்தரவு வேண்டுமெனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.தண்டபானி, குறிப்பிட்ட அந்த பத்திரிகையில் செய்தி வெளியாகி மக்களை சென்று விட்ட நிலையில், பிரதிகளை திரும்ப பெறுவது பயனற்றது என தெரிவித்துள்ளார்.

image

இருப்பினும் இந்த வழக்கில் பத்திரிகையையும், அதன் ஆசிரியரையும் எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 15-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்டவர்கள், குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சாட்சிகளை பத்திரிகை அல்லது காட்சி ஊடகங்களில் அவர்களது முக மற்றும் அடையாளங்களை மறைத்தோ, நேரடியாகவோ செய்தியாக வெளியிட தடைவிதித்துள்ளார். இந்த உத்தரவை மீறும் ஊடகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post