கரை புரண்டு ஓடும் காவிரி: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

காவிரியில் வினாடிக்கு ஒரு லட்சத்து 35 ஆயிரம் கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக, கேரளா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளான கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பியுள்ளது. இதனால் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு மீண்டும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

image

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி கபினி 5000 மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து வினாடிக்கு 18,471 கன அடி என மொத்தம் 24,471 கன அடியாக தண்ணீர் அதிகரித்து திறக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கர்நாடக அணைகளில் நீர்திறப்பு அதிகரிப்பு மற்றும் கடந்த சில நாட்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுவுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று காலை நிலவரப்படி நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 45,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 50,000 கன அடியாக இருந்தது. நேற்று நண்பகலில் மேலும் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. தொடர்ந்து மாலை 1 லட்சத்து 10 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது.

image

இதைத் தொடர்ந்து, இன்று காலை மேலும் அதிகரித்து வினாடிக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் ஒகேனக்கல் மெயினருவி, சினியருவி, ஐந்தருவிகள் உள்ளிட்டவைகளை தண்ணீர் மூழ்கடித்து, பாறைகள் தெரியாதளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்திருப்பதால், காவிரி கரையோர பகுதிகளில், வருவாய், ஊரக வளர்ச்சி, தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

image

மேலும் நீர்வரத்து அதிகரிப்பால், காவிரி ஆற்றில் தமிழக பிலிகுண்டுவில் மத்திய நீர் ஆணைய அலுவலர்கள் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post