இபிஎஸ்ஸா? ஓபிஎஸ்ஸா?.. தனித்தனியே ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை - யார் யாருடன் சந்திப்பு?

வரும் 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்கள் நடைபெற உள்ள நிலையில், அதிமுக ஆலோசனை கூட்டத்தில் தொண்டர்கள் சிலர் ஒற்றை தலைமை வேண்டும் என கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். வரும் 23-ம் தேதி பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டங்கள் நடைபெறவுள்ள நிலையில், இந்த ஆலோசனை நடைபெற்றது.

image

இந்நிலையில், அலுவலகத்திற்கு வெளியே நின்றிருந்த தொண்டர்களில் சிலர் அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என தொடர்ந்து கோஷம் எழுப்பினர். அப்போது அங்கிருந்த மற்றொரு தரப்பினர் ஓ.பன்னீர் செல்வம் தான் கட்சி தலைமை பதவிக்கு வர வேண்டும் என கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் எழுந்தது. இதையடுத்து, அதிமுக கட்சி அலுவலக நிர்வாகிகள் நேரடியாக வந்து சமரசத்திற்கு ஈடுபட்டு கோஷம் எழுப்பியவர்களை சமாதானப்படுத்தினர்.

இதையடுத்து ஆலோசனை கூட்டம் முடிந்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசும்போது, ஒற்றை தலைமை குறித்து ஆலோசனை கூட்டத்தில் பலரும் கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார்.

இந்நிலையில், ஒற்றைத்தலைமை விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் ஆலோசனை நடைபெற்றது. இதில், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன், தேனி மாவட்ட செயலாளர் சையது கான், நெல்லை மாவட்ட செயலாளர் கணேச ராஜா, தென்சென்னை மாவட்ட செயலாளர் வேளச்சேரி அசோக் ஆகியோர் பங்கேற்றனர்.

image

இதையடுத்து முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் ஆர்பி.உதயகுமார் ஆகியோர் ஓபிஎஸ் இல்லத்திற்கு வந்தனர். இதைத் தொடர்ந்து சிவி.சண்முகம் எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கு வருகை தந்தார்.

இதைத் தொடர்ந்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் ஒ.பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசியதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். கட்சியில் ஒற்றை தலைமை குறித்த கேள்விக்கு... மூத்த நிர்வாகிகளுடன் பேசிக் கொண்டிருக்கிறோம். எந்த நடவடிக்கையாக இருந்தாலும் கட்சி முடிவு செய்யும் என்றார்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் வளர்மதி, காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் சிட்லப்பாக்கம் இ.ராஜேந்திரன், புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் மற்றும் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் ஆகியோர் இபிஎஸ் இல்லத்திற்கு வந்தனர்.

image

எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் வளர்மதி பேசும்போது, ’தொண்டர்கள் எதிர்பார்ப்பது ஒற்றை தலைமை. அதற்கான பேச்சுவார்த்தைதான் நடைபெற்று வருகிறது. செயற்குழு பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமைக்கான தீர்மானம் நிறைவேற்றுவது தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. தொண்டர்கள் விரும்பும் ஒருவர் தான் தலைமைக்கு வருவார் என்றவரிடம், உங்கள் ஆதரவு யாருக்கு என்ற கேள்விக்கு குழப்பமான சூழல், நான் யாருக்கு ஆதரவு என்பதை தெரிவிக்க முடியாது’ என்றார்.

இதையடுத்து அதிமுக மாணவரணி செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது...

நாங்கள் மாவட்ட வாரியாக நடைபெற்ற கூட்டத்தில் ஒற்றை தலைமை வேண்டும் என்று பலரிடமும் கருத்து வந்தது. அதன் அடிப்படையில் ஒற்றை தலைமை வேண்டும் என்று கூறினோம். நான்கரை ஆண்டு காலத்தில் சிறப்பாக ஆட்சி செய்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டால் சரியாக இருக்கும் என்று மாணவரணி சார்பாக எங்களுடைய ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு தெரிவித்தோம் என்றார்.

image

இதைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அவரை பார்ப்பதற்காக கட்சி தொண்டர்கள் பலர் காத்திருந்தனர். அவர்களை ஓபிஎஸ் சந்தித்தார்.

முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஒற்றை தலைமை என்பது காலத்தின் கட்டாயம் ஆகியுள்ளது, சாதாரண உறுப்பினர்கள் தொடங்கி நிர்வாகிகள் வரை அந்த கருத்து எழுந்துள்ளது. எனவே கொள்கை ரீதியாக ஒற்றை தலைமை என்ற கருத்துக்கு ஆதரவு எழுந்துள்ளது. கட்சியினுடைய தலைமை முடிவு செய்யும் என்றும் தெரிவித்தார். கட்சி நிர்வாகிகள் அவர்களுடைய கருத்துக்களை கூட்டத்தில் தெரிவித்தனர். உட்கட்சி விவகாரத்தை வெளியில் கூற முடியாது. 23ஆம் தேதி வரை தலைமை யார் என்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகுமா என்ற கேள்விக்கு பெரியவர்கள் கூடி முடிவெடுப்பார்கள் என்றார்.

அதிமுக ஒற்றை தலைமையை நோக்கி நகருமா அப்படி நகர்ந்தால் ஒற்றை தலைமையை நோக்கி முன்னேறிச் செல்வது யார்? எடப்பாடி பழனிசாமியா? ஓ.பன்னீர்செல்வமா காலம்தான் பதில் சொல்லும்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post