சென்னை கொடுங்கையூர் காவல் நிலைய விசாரணை கைதி ராஜசேகர் சந்தேக மரணம் தொடர்பான வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் உள்ளது.
கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ராஜசேகர் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணையின்போது உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் உதவி ஆய்வாளர் மற்றும் மூன்று காவலர்கள் என ஐந்து பேரை சஸ்பெண்ட் செய்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்தார். மேலும் மாஜிஸ்ட்ரேட் லட்சுமி தலைமையில் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. கொடுங்கையூர் எவரெடி காலனி மூன்றாவது தெருவில் உள்ள போலீஸ் பூத்தில் மாஜிஸ்ட்ரேட் லட்சுமி விசாரணை மேற்கொண்டார். அதன்பின் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் காவலர்கள் மற்றும் உயிரிழந்த ராஜசேகரனின் உறவினர்கள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது முதல் முறை அல்ல என கூறப்படுகிறது. விசாரணைக்காக வரும் நபர்களிடம் சட்டவிரோதமாக கடுமையாக நடந்துகொள்வது ஏற்கனவே பலமுறை நடந்தது தொடர்பாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. கடந்த 2012 ஆம் ஆண்டு பெண் ஒருவர் மாயமான விவகாரத்தில் காவல்துறை மற்றும் வழக்கறிஞர்கள் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அம்பத்தூர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் உட்பட மூன்று காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதேபோன்று 2013ஆம் ஆண்டு நில அபகரிப்பு விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு அழைத்து வந்த நபரிடம் விதிகளை மீறி நடந்து கொண்ட விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையத்தில் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் மீது வழக்கு தொடரப்பட்டது. இதில் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜூக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் கடந்து 2019ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.
இதுபோன்று விசாரணைக்கு வரும் நபர்களிடம் அவதூறாகவும் தாக்குதலில் ஈடுபடுவதாக அவர் பணிபுரிந்த காவல்நிலையங்களில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளன. மேலும் கடந்த ஆண்டு சென்னை முகப்பேரில் சேர்ந்த தயாளன் என்பவர் தனது சொத்துக்களை அபகரிக்க காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் முயல்வதாக புகார் ஒன்றை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்தார்.
கடந்த 2020ஆம் ஆண்டு சட்டவிரோதமாக மதுபானம் விற்ற விவகாரம் தொடர்பாக தேவேந்திரன் என்பவர் கைது செய்யப்பட்டு காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லரை அவதூறாக பேசிய விவகாரத்தில், காவல் நிலையம் அழைத்து வரப்பட்டு தாக்கியதாக குற்றச்சாட்டு உள்ளது. காவல்துறை தரப்பில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட தேவேந்திரன் பாத்ரூமில் வழுக்கி விழுந்துவிட தெரிவித்ததையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.
2018 ஆம் ஆண்டு வாடகை வீட்டில் இருந்த தன்னை தாக்கி வெளியேறியதாக நடிகை வனிதா ஆய்வாளர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் மீது விசாரணைக்கு வருபவர்களிடம் விதிகளை மீறி செயல்பட்டதாக காவல்நிலையத்தில் வழக்கு மற்றும் மாநில மனித உரிமை ஆணையத்தின் 2 வழக்குகளும், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
- செய்தியாளர் சுப்ரமணியன்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News