கோவையில் விளையாடிக் கொண்டிருந்தபோது புதரில் விழுந்த பந்தை எடுக்கச் சென்ற சிறுவன் பாம்பு கடித்ததில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வடிவேல் முத்து என்பவரது 12 வயது மகன் மணிவேல் கம்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் கோவை துடியலூர், டி.வி.எஸ் நகர் பகுதியில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு கடந்த 2 நாட்களுக்கு முன் சிறுவன் மணிவேல் வந்திருந்தான்.
இந்நிலையில் வீட்டின் மொட்டை மாடியில் சிறுவன் பந்து வீசி விளையாடிக் கொண்டிருந்தாக தெரிகிறது. அப்போது பந்து மாடியில் இருந்து வீட்டின் அருகே உள்ள புதருக்கு விழுந்துள்ளது. அதனை எடுக்க மணிவேல் சென்றபோது புதருக்குள் இருந்த கொடிய விஷப்பாம்பு, சிறுவனின் கையில் கடித்துள்ளது. வலியில் துடித்த சிறுவனை உறவினர்கள் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆபத்தான கட்டத்தில் சிறுவன் அதிதீவிர அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு இருந்தார். இந்நிலையில் சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுவன் உயிரிழப்பு தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News