புதுக்கோட்டையில் 5-வது புத்தகத் திருவிழா வருகின்ற ஜூலை 29 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை நடைபெறும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இந்த ஆண்டும் புத்தகத் திருவிழாவை நடத்த திட்டமிட்டனர். இதற்கான வரவேற்பு குழுக் கூட்டம் புதுக்கோட்டையில் உள்ள தமிழ்நாடு அறிவியல் இயக்க அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி கலந்துகொண்டு 5-வது புத்தகத் திருவிழா ஜூலை 29-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 7-ம் தேதி வரை நடைபெற உள்ளது என அறிவித்ததோடு, புத்தக திருவிழாவுக்கான விழிப்புணர்வு போஸ்டரையும் வெளியிட்டு பேசினார்.
பின்னர், புத்தகத் திருவிழா குறித்த விழிப்புணர்வை மாவட்டத்தின் கடைகோடி கிராமங்கள் வரை கொண்டுசெல்வதோடு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை அதிக எண்ணிக்கையில் பங்கேற்கச் செய்யவேண்டும் என்றும், புத்தக விற்பனையை ஒரு கோடி ரூபாய்க்குமேல் அதிகரிக்கச் செய்வதோடு, இரவு கூட்டங்களை சிறப்பாக நடத்துவது குறித்தும் கூட்டத்தில் பங்கேற்றோர் கருத்துகளை தெரிவித்தனர்.
மேலும் இந்த ஆண்டு புத்தகத் திருவிழா குறித்து பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, புத்தக விற்பனையை அதிகரிப்பது, உரிய பாதுகாப்பு வழிமுறைகளை ஏற்படுத்துவதற்கு உள்ளிட்டவை குறித்த கலந்தாய்வு கூட்டமும் அப்போது நடைபெற்றது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News