சித்திரை பெருவிழாவை முன்னிட்டு மதுரைக்கு வந்திருந்த கள்ளழகர், லட்சக்கணக்கான பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டு பிரியாவிடை பெற்று அழகர்கோவில் நோக்கி புறப்பட்டார்.
மதுரையின் அடையாளங்களில் ஒன்றான சித்திரை திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவுக்காக 14 ஆம் தேதி அழகர்கோவிலில் இருந்து புறப்பட்ட கள்ளழகரை வழிநெடுகிலும் எதிர்சேவை அளித்து மக்கள் வரவேற்றனர். பின்னர் வைகையாற்றில் எழுந்தருளுதல், மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்குதல், தசாவதாரக் காட்சி என அடுத்தடுத்த நிகழ்வுகளில் கலந்து கொண்ட கள்ளழகர், பூப்பல்லக்கில் எழுந்தருளி மதுரையில் இருந்து அழகர் மலைக்கு புறப்பட்டார்.
மதுரை மாநகரின் எல்லையான மூன்று மாவடிக்கு வந்த கள்ளழகரை, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், கையில் தீபம் ஏந்தியும் மலர் தூவியும் வழி அனுப்பி வைத்தனர். இதனிடையே மூன்றுமாவடியை கடந்து அழகர் கோவில் நோக்கி சென்ற போது, சூர்யா நகர் அருகே பெரியசாமி மண்டகப்படியில் கள்ளழகர் எழுந்தருளினார். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த மேற்கூரையின் முன்பகுதி இடிந்து விழுந்ததில், 4 காவலர்கள் உள்பட 10 பேர் காயமடைந்தனர்.
இதையும் படிக்கலாம்: தருமபுரம் ஆதீனம் வந்த ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு - மயிலாடுதுறையில் பரபரப்பு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News