இந்தியாவில் டெல்லி, ஹரியானா, உ.பி ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. இருப்பினும் தமிழகத்தில் பெரியளவிலான தொற்று உயர்வு இல்லை என்றாலும்கூட குறிப்பிட்ட 8 மாவட்டங்களில் 25 - 30-க்கும் மேற்பட்டோருக்கு புதிதாக நோய் பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருகிறது. இது மற்ற மாவட்டங்களிலும் பரவாமல் இருக்கவும், பிற மாநிலங்களில் அதிகரித்துவரும் கோவிட் தொற்றை மனதிற்கொண்டும் `தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்’ என தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் தேவையான அனைத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பிய கடிதத்தில், “தமிழகத்தில் கொரோனோ பரவல் அதிகரிக்காத வகையில், அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் பொதுமக்கள் கூட கூடிய இடங்களில் மீண்டும் முகக்கவசம் அணிவதை தொடர்ந்து வலியுறுத்தவும். மேலும் 1.37 கோடி பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியை குறித்த காலத்திற்குள்ளாக செலுத்தாத நிலையில் அவர்களுக்கான தடுப்பூசி செயல்பாடுகளை உறுதிப்படுத்தவும். போலவே முதியவர்கள் மற்றும் இணை நோய் பாதிப்பு இருப்பவர்களை கண்டறிந்து பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி செலுத்தும் பணி மற்றும் மாணவர்களுக்கான தடுப்பூசி திட்டம் ஆகியவற்றை தீவிரபடுத்தவும்.
தேவையான நபர்களுக்கு பிசிஆர் கொரனோ பரிசோதனைகளை உடனுக்குடன் எடுத்து நோய் பாதிப்பு கண்டறிதல், மருத்துவ கட்டமைப்புகளை அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் வைத்தல், உருமாறும் ஒமைக்கரான் பாதிப்பு மற்றும் வைரஸ் உருமாற்றத்தை உடனுக்குடன் கண்டறிய அதிக நோய் பாதிப்பு கண்டறியப்படும் இடங்களில் மாதிரிகள் பெறப்பட்டு மரபணு பகுப்பாய்வு செய்திடவும். பொதுமக்களிடையே உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக நோய் பரவல் குறைந்துள்ள நிலையில், அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றுதல் வெகுவாக குறைந்து விட்டது. அரசின் வழிகாட்டுதலான முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி பின்பற்றுதல், கை கழுவுதல் உள்ளிட்ட வழிகாட்டுதலை பொதுமக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும். தடுப்பூசியும் செலுத்திக் கொள்ள வேண்டும்.
தற்போதைய சூழலில் தமிழகத்தில் 93% ஒமைக்கரான் BA-2 வைரஸ் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. XE வகை பாதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை” என சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய செய்தி: “தமிழகத்தில் மாஸ்க் கட்டாயம்தான்”- அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News