கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நாளை காலை சசிகலாவிடம் காவல்துறை விசாரணை நடத்த உள்ளனர்
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோருக்கு சொந்தமான எஸ்டேட், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாட்டில் உள்ளது. இந்த எஸ்டேட்டில் உள்ள பங்களாவில், கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடந்தது. அப்போது பங்களாவில் இருந்த சில பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த சம்பவத்தின்போது அங்கு காவலாளியாக இருந்த ஓம்பகதூர் என்பவர் கொலை செய்யப்பட்டார். கொள்ளையர்கள் தாக்கியதில், மற்றொரு காவலாளியான கிருஷ்ணதாபா படுகாயம் அடைந்தார்.
இது தொடர்பாக கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து 9 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையில் கோடநாடு வழக்கில் கூடுதலாக கிடைத்த தகவலின் பேரில் காவல்துறையினர் மறுவிசாரணை நடத்தி வருகிறார்கள். வழக்கு குறித்து முழு விசாரணை நடத்த 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. வழக்கில் தொடர்புடையவர்களின் மரணம் அடுத்தடுத்து நடந்ததால், கோடநாடு சம்பவத்துக்கும், இதற்கும் தொடர்பு எதுவும் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோடநாடு சம்பவம் தொடர்பாக சசிகலாவின் அண்ணன் மகன் விவேக்கிடம் தனிப்படை போலீசார் கடந்த டிசம்பரில் விசாரணை நடத்தினர். அண்மையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டியிடம் 5 மணி நேரமாக விசாரணை நடைபெற்றது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முக்கியமானவரான ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், ஆறுக்குட்டியிடம் ஓட்டுநராக சில காலம் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
தற்போது இவ்வழக்கில் நாளை காலை சசிகலாவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்த உள்ளனர். விசாரணைக்கு நாளை காலை 10 மணிக்கு ஆஜராகுமாறு சசிகலாவிற்கு நீலகிரி காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கோடநாட்டில் இருந்த சொத்துக்கள் மற்றும் காணாமல் போன பொருட்கள் குறித்தும் சசிகலாவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை தனியார் ஹோட்டலில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் சொத்து ஆவணங்கள் கிடைத்தது குறித்தும் விசாரிக்கபடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News