தஞ்சை பெரிய கோவில் சித்திரைத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கடந்த மாதம் 7 ஆம் தேதி இதற்கான பந்தகால் முகூர்த்தம் நடைபெற்றது. இன்று காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
முன்னதாக, கோவிலில் பஞ்சமூர்த்திகளுக்கு கொடிமரம் முன்பு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கோயில் வளாகத்தில் பல்லக்கில் எடுத்து வந்து தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது சிவாலய வாத்தியங்கள் முழங்க திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர். இன்று மாலை 6.30 மணியளவில் சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது. நாளை காலை பல்லக்கும், மாலையில் சிம்ம வாகனத்தில் விநாயகர் புறப்பாடும் நடக்க உள்ளது.
இதனைத் தொடர்ந்து நாள் தோறும் சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்று, வரும் ஏப்ரல் 13ந் தேதி காலை 6.30 மணிக்குமேல் 7.30 மணிக்குள் தியாகராஜர், ஸ்கந்தர், கமலாம்பாள் முத்துமணி அலங்கார சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெறுகிறது. அதே நேரத்தில் அதிகாலை 5.45 மணிக்கு மேல் தியாகராஜசுவாமி அம்பாள் தேரில் எழுந்தருள உள்ளார். பின்னர் காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News