திருவள்ளூர் அருகே காதலித்து கர்ப்பமாக்கி திருமணம் செய்து தலைமறைவான கணவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கண்டித்து காதலன் வீட்டு முன்பு பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் அடுத்த மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவரது மகள் லட்சுமி (23). டிப்ளமோ நர்சிங் முடித்துள்ள இவரும், வீட்டுக்கு அருகில் உள்ள சின்னராசு என்ற இளைஞரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இருவரும் போளிவாக்கத்தில் உள்ள அமேசான் விநியோக பிரிவில் வேலை செய்து வந்த நிலையில், திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கர்ப்பமாக்கி 2 முறை கருக்கலைப்பும் செய்துள்ளார்.
இந்நிலையில், சின்னராசுவுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து சின்னராசுவின் பெற்றோரிடம் சென்று நியாயம் கேட்டும் பதிலளிக்காததால் சின்னராசு மீது ஊத்துக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் லட்சுமி. அந்த புகாரின்பேரில் ஊத்துக்கோட்டையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் கடந்த ஜனவரி மாதம் 8-ஆம் தேதி இருதரப்பு உறவினர்கள் முன்னிலையில் சின்னராசு தாலி கட்டியுள்ளார்.
இதனையடுத்து தேவாலயத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த சின்னராசு மனைவி லட்சுமியை கீழே இறக்கிவிட்டு, சிறிது நேரத்தில் வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு தலைமறைவானார். இதனால் அதிர்ச்சி அடைந்த லட்சுமி, வீட்டிற்கு வந்து பார்த்தபோது சின்னராசு குடும்பத்தார் யாரும் இல்லை. இதனால் மிகுந்த மன வேதனைக்குள்ளான லட்சுமி, காவல்துறை உயரதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளார்.
ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து காதலித்து ஏமாற்றி, காவல் துறையினரின் விசாரணைக்குப் பிறகு திருமணம் செய்து நடுரோட்டில் விட்டு சென்ற சின்னராசுவை கைது செய்யாமல் இருப்பதால் ஆத்திரம் அடைந்த லட்சுமி காதலன் சின்னராசு வீட்டு வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் மெய்யூர் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News