திருவள்ளூரில் பூஜைக்காக ஆஸ்ரமம் சென்ற கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் நியாயம் கிடைக்க வேண்டியும், பூசாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் உயிரிழந்த மாணவியின் உறவினர், திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஆட்சியர் காலில் விழுந்து கதறினர்.
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அடுத்த வெள்ளாத்துக்கோட்டை பகுதியில் உள்ள கோயிலுக்கு செம்பேடு பகுதியைச சேர்ந்தவர் ஹேமமாலினி(20). கல்லூரி மாணவியான இவர், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த 13-ஆம் தேதி நள்ளிரவு பூஜைக்காக கோயிலுக்கு சென்றுள்ளார். மறுநாள் 14-ஆம் தேதி அதிகாலையில் பூச்சி மருந்து குடித்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பூசாரி முனுசாமி மற்றும் அவரது மனைவி ஹேமாமாலினி மீது மாணவியின் தந்தை ராமகிருஷ்ணன் பென்னலூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து பூசாரி முனுசாமி அவருடைய மனைவியை தேடி வந்தனர். இந்த நிலையில் தன் மகளை பூசாரி கொன்று விட்டதாகவும், தங்களுக்கு நியாயம் வேண்டி கல்லூரி மாணவி குடும்பத்தினர் திருவள்ளூர் ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தனர்.
அப்போது ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வந்த உடன், உயிரிழந்த ஹேமமாலினி குடும்பத்தினர் ஆட்சியரின் காரை வழிமறித்து அவரின் காலில் விழுந்தார். மேலும், தமது மகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனவும், பூசாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், கோயிலில் உள்ள 50 பெண்களையும் காப்பாற்ற வேண்டும் என்றும் பென்னலூர் பேட்டை காவல் துறையினர் புகாரை முறையாக விசாரிக்க கூட இல்லை எனவும், உயிரிழந்த ஹேமமாலினியின் பெரியம்மா இந்திராணி ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் காலில் விழுந்து கதறி அழுதார்.
உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும், திருவள்ளூர் எஸ்பியிடம் கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.இதனிடையே பூசாரி முனுசாமியை ஊத்துக்கோட்டை டிஎஸ்பி அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News