லீ மெரிடியன் ஓட்டலை எம்.ஜி.எம். நிறுவனம் கையகப்படுத்தும் திட்டம் ரத்து-தீர்ப்பாயம் உத்தரவு

லீ மெரிடியன் உள்ளிட்ட அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் சொத்துக்களை, ரூ.423 கோடி ரூபாய்க்கு எம்.ஜி.எம். ஹெல்த்கேர் நிறுவனத்தின் எம்.கே.ராஜகோபாலனுக்கு வழங்கும் நடவடிக்கைகளை, தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ரத்து செய்துள்ளது.

பிரபல தொழிலதிபர் பழனி ஜி பெரியசாமியின் அப்பு ஹோட்டல் நிறுவனம், இந்திய சுற்றுலா நிதி நிறுவனத்திடம் வியாபார நடவடிக்கைகளுக்காக கடன் பெற்று இருந்தது. அந்த கடனை திருப்பி செலுத்தவில்லை என்பதால் அப்பு ஹோட்டல் நிறுவனம் திவாலானதாக கருதி, சென்னை மற்றும் கோவையில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டல்களையும், கும்பகோணத்தில் உள்ள ரிவர்சைட் ஸ்பா மற்றும் ரிசார்ட்டையும் விற்று கடனை அடைக்க அனுமதிக்கக் கோரி, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் இந்திய சுற்றுலா நிதி நிறுவனம் வழக்குத் தொடர்ந்து.

அதை விசாரித்த தீர்ப்பாயம், அந்த சொத்துக்களின் மதிப்பை கணக்கிடுவதற்கும், அவற்றை வாங்குவதற்கான நபரை கண்டறிவதற்கும் தீர்வாளரை நியமித்தது. இந்த சொத்துக்களின் மதிப்பு 730.88 கோடி ரூபாய் எனவும், 569.33 கோடி ரூபாய்க்கு வாங்குபவர்களுக்கு விற்கலாம் எனவும் தீர்வாளர் (resolution professional) முடிவெடுத்தார்.

அவற்றை வாங்குவதற்கு மாதவ் திர், எம்.ஜி.எம். ஹெல்த்கேர் நிறுவனத்தின் எம்.கே. ராஜகோபாலன், கோட்டக் ஸ்பெஷல் சிச்சுவேஷன் ஆகியவை விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், ராஜகோபாலன் குறிப்பிட்டிருந்த 423 கோடி ரூபாய்க்கு அவற்றை விற்கலாம் என அளித்த பரிந்துரையை ஏற்ற தீர்ப்பாயம், அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் லீ மெரிடியன் உள்ளிட்ட 4 சொத்துகளை, எம்.ஜி.எம். ஹெல்த்கேர் நிறுவன எம்.கே.ராஜகோபாலனிடம் மாற்ற அனுமதித்து.

image

இதை எதிர்த்து அப்பு ஹோட்டல் நிறுவனத்தின் இயக்குனர் பழனி ஜி பெரியசாமி, தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் The National Company Law Tribunal (NCLT) வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நீதித்துறை உறுப்பினர் எம். வேணுகோபால், தொழில்நுட்ப வல்லுநர் உறுப்பினர் வி.பி.சிங் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அப்பு ஹோட்டல்ஸ் தரப்பில் 1600 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், தங்கள் நிறுவன கடனை அடைக்க மற்ற வங்கிகள், நண்பர்கள் மூலம் 450 கோடி ரூபாயை ஏற்பாடு செய்ய தயாராக இருப்பதாகவும், அதனால் தீர்ப்பாய உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென வாதிடப்பட்டது.

தீர்வாளர் ராதாகிருஷ்ணன், தர்மராஜன் மற்றும் எம்.ஜி.எம். ஹெல்த்கேர் நிறுவனத்தின் ராஜகோபாலன் ஆகியோர் தரப்பில் மதிப்பீடு முறையாக செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை ஏற்று தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில் தவறு ஏதும் இல்லை என வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், லீ ராயல் மெரிடியன் உள்ளிட்ட அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் சொத்துக்களை எம்.கே.ராஜகோபாலனுக்கு மாற்றும் நடைமுறைகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post