ஆரம்ப சுகாதார நிலையங்களை தற்காலிக கொரோனா மையங்களாக மாற்ற நெறிமுறைகள் வெளியீடு

கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஆரம்ப சுகாதார நிலையங்களை தற்காலிக கொரோனா பராமரிப்பு மையங்களாக மாற்றவேண்டும் எனவும், கொரோனா நோயாளிகளுக்கு வழங்கும் சிகிச்சைகள் குறித்தும் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் பொது சுகாதாரத்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு காரணமாக ஆபத்துள்ள நாடுகளில் இருந்துவரும் பயணிகள் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த பயணிகளும் கண்காணிப்பபட்டு வருகின்றனர். இதற்காக, தமிழகத்தில் உள்ள 4 சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் 3 துறைமுகங்களிலும் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 29.12.2021 அன்று முதல் தமிழகம் முழுவதும் கொரோனா நோய் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. தமிழகத்தில் இன்று சுமார் 2,731பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 28.12.2021 அன்று 619 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. தற்பொழுது, கிட்டத்தட்ட 4.5 மடங்கு அதிகரித்துள்ளது. சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 10,364 ஆக உயர்ந்துள்ளது. இதனால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தரம் உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சமூக சுகாதார நிலையங்கள் கீழ்க்கண்டவாறு இடைக்கால கோவிட் பராமரிப்பு மையமாக மாற்றப்படும் என பொதுசுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

image

அவர் கூறுகையில், ‘’அந்த மையங்களில், ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களையும் 30 படுக்கைகள் கொண்ட கொரோனா பாராமரிப்பு மையமாக மாற்ற வேண்டும். இங்கு லேசான மற்றும் மிதமான அறிகுறியுள்ள நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படும். ரத்த மாதிரி பரிசோதனைகளில் உள்ள CRP, LDH, D-dimer, IL-6, Serum ferritin போன்ற சிறப்பு பரிசோதனைகளை செய்யவும் தயாராக இருக்க வேண்டும். அங்கு ஒரு அவசர ஊர்தியை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கொரோனா அல்லாத கர்ப்பிணிகளுக்கு மட்டும் பிரசவம் பார்க்க வேண்டும். கொரோனா நோயாளிகளுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ள சிகிச்சைகள் மற்றுமெ மருந்துகளை மட்டுமே வழங்க வேண்டும். இதற்காக தேவையான மருந்நுகளை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்.

image

லேசான அறிகுறி உள்ள நோயாளிகளுக்கு, வைட்டமின் சி (500mg OD x 5 நாட்கள்), சின்க் (50mg OD x 5 நாட்கள்), காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு இருந்தால், பாராசிடமால் (500 mg 4 நாட்கள்) வழங்க வேண்டும். இணைநோய் உள்ள நோயாளிகளுக்கு அதற்கான மருந்துகளையும் சேர்த்து கொடுக்கவேண்டும். 5 நாட்களுக்குத் தொடர்ந்து காய்ச்சல், உடல் சோர்வு, இருமல், மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் பல்ஸ் ஆக்சிமீட்டர் மூலம் தொடர்ந்து பரிசோதிக்க வேண்டும். கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பிறகு தொடர்ந்து 3 நாட்களுக்கு காய்ச்சல் இல்லை என்றால் டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும். டிஸ்சார்ஜ் செய்வதற்கு முன் பரிசோதனை செய்யவேண்டிய அவசியமில்லை. வீட்டிலேயே தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளவும், மேலும் 7 நாட்களுக்கு அவர்களின் ஆரோக்கியத்தை சுயமாக கண்காணிக்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்த வேண்டும்.

வீட்டுத்தனிமையில் உள்ள நோயாளிகள் உடல் உழைப்பை தவிர்க்க வேண்டும். ஒரு நாளைக்கு 16 மணிநேரம் வரை படுக்கை ஓய்வு எடுக்க வேண்டும். சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்றவற்றை அவ்வப்பொழுது பரிசோதித்துக்கொள்ளவும், நோயாளிகளுக்கு டிஸ்சார்ஜ் செய்யும் முன் மருத்துவர்கள் அறிவுறுத்த வேண்டும். இதுபோன்ற வழிகாட்டு நெறிமுறைகளை மருத்துவர்களும், நோயாளிகளுப் பின்பற்ற வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post