கோவையில் குடோனில் பதுங்கியுள்ள சிறுத்தையை பிடிக்கும் பணியில் நான்காவது நாளாக வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிந்த சிறுத்தை, கடந்த நான்கு நாட்களாக பி.கே.புதூர் பகுதியில் உள்ள குடோனில் பதுங்கியுள்ளது. குடோனின் இரு புறமும் கூண்டுகள் வைத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மூன்று நாட்களாக உணவு தண்ணீரின்றி சிறுத்தை குடோனில் உள்ள நிலையில், அதற்கான உணவு கூண்டில் வைக்கப்பட்டிருக்கிறது. அதனை சாப்பிட சிறுத்தை கூண்டிற்குள் நுழைந்தால், பிடித்து விடும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இருப்பினும், கூண்டிற்கு அருகே வந்த சிறுத்தை, சுதாரித்துக் கொண்டு, அதற்குள் நுழையாமல், அப்பகுதியிலிருந்து வெளியேறுவதற்கான வழியை தேடி, குடோன் முழுவதும் சுற்றி வருகிறது. இது தொடர்பான காட்சிகளை வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர். ஆறு கேமராக்கள் பொருத்தப்பட்டு, சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இதனிடையே சிறுத்தையை பிடிக்கும் பணிக்காக, நாய் ஒன்று கட்டி வைக்கப்பட்டிருந்தது. இதற்கு, விலங்கின ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தது தொடர்பாக புதிய தலைமுறையில் செய்தி வெளியான நிலையில், அந்த நாய் விடுவிக்கப்பட்டது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News