தந்தை உறவு சொத்தில் மகள்களுக்கு உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பு

1956 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வாரிசு உரிமை சட்டத்திற்கு முன்னதாக, இறப்பு ஏற்பட்டு இருந்திருந்தாலும், தந்தை உறவு சொத்தில் மகள்களுக்கு உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இது தொடர்பான வழக்கு ஒன்றில் தமிழகத்தைச் சேர்ந்த அருணாச்சலா என்பவர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு செய்யப்பட்டது. அதில் ராமசாமி என்பவரின் அண்ணன் மாரப்பா கடந்த 1949ஆம் ஆண்டு இறந்துவிட்டதாகவும், மாரப்பாவின் மகளும் இறந்து விட்ட நிலையில், அவரது குடும்ப சொத்துக்கள் அனைத்தும் தம்பி வாரிசான ஆண் பிள்ளைகளுக்கு மட்டுமே சேரும் என உரிமை கோருவதாகக் குறிப்பிட்டுள்ளார். சொத்தில், பெண்களுக்கு உரிமை இல்லை எனத் தெரிவிப்பதாகவும் கூறினார். 1956ஆம் ஆண்டு வாரிசு உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது என்பதால், அதற்கு முன்பாகவே மாரப்பா இறந்து விட்டதால், அவருடைய தம்பி மகள்களுக்கும் சொத்தில் உரிமை உண்டா என நீதிமன்றம் விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கோரினார்.

image

இந்த வழக்கை பல கட்டங்களாக விசாரித்த நீதிபதிகள், மாரப்பா இறந்ததுமே சொத்து முழுவதும், அவருடைய மகளான குப்பாயம்மாளுக்கு சென்று விட்டதாகக் தெரிவித்தனர். அவரும் இப்போது உயிருடன் இல்லாததால், தற்போதுள்ள சொத்துகள் அனைத்திலும் மாரப்பாவின் தம்பி மகன்களுக்கு மட்டுமின்றி, அவருடைய மகள்களுக்கும் உரிமை உண்டு என நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். மேலும் 1956 ஆம் ஆண்டு வாரிசு உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்ட நிலையில், அதற்கு முன்பாக இறப்பு ஏற்பட்டு இருந்தாலும், தந்தை உறவு சொத்தில் பெண்களுக்கும் உரிமை உண்டு என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

1956ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்து வாரிசு உரிமைச் சட்டத்தின் பிரிவில், 2005ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி, மகள்களுக்கும் சொத்துரிமை அளிக்கப்பட்டது.

Post a Comment

Previous Post Next Post