
கரூரில் திடீர் வெடிச்சத்தம் தொடர்ந்து நில அதிர்வை உணர்ந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கரூரில் இன்று காலை 11.05 மணியளவில் திடீரென்று பலத்த வெடிச்சத்தம் கேட்டது. தொடர்ந்து சில நொடிகளுக்கு நில அதிர்வு ஏற்பட்டது. குறிப்பாக வெங்கமேடு, கரூர், தாந்தோன்றிமலை போன்ற பகுதியில் இந்த அதிர்வு நன்கு தெரிந்ததால், அங்குள்ள கடைகள் மற்றும் வீடுகளில் உள்ள மக்கள் பெரும் அச்சம் அடைந்தனர். இந்த நிலையில் நில அதிர்வு காரணமாக தாந்தோன்றிமலை கருப்ப கவுண்டன்புதூர் பகுதிகளில் உள்ள வீடுகளில் திறந்து வைக்கப்பட்டிருந்த கதவுகள் தானாக சாத்திக்கொண்டது என மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் பின்னணி குறித்து விசாரித்தபோது, பொதுவாக தஞ்சையில் உள்ள விமானப்படை பயிற்சி தளத்தில் இருந்து அடிக்கடி கோவை சூலூர் விமான பயிற்சி தளத்திற்கு சூப்பர்சானிக்ஜெட் அதிவேக விமானம் செல்வது வழக்கம் என்றும், அப்போது அதிலிருந்து வெளிவரும் ஒருவிதமான சத்தம் நிலப்பகுதியில் இதுபோன்ற அதிர்வுகளை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரிடம் கேட்டபோது, "இது குறித்து விசாரித்து கூறுகிறேன்" என்றார். அதேநேரம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங், "அந்த பயங்கர சத்தத்துக்கு சூப்பர் சோனிக் விமானம் பறந்ததே காரணம்" என்று தகவல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க... தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு உறுதியானதா? - மருத்துவத்துறை அமைச்சர் விளக்கம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News