இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் விதமாக தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டு கிறிஸ்துமஸ் பெருவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
சின்ன வேளாங்கண்ணி என அழைக்கப்படும் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னை பெசன்ட்நகர் புனித தோமையார் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. குடும்பத்துடன் பேராலயத்தில் திரண்ட கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.புகழ்பெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. கோவையில் உள்ள பேராலயங்களிலும் சிறப்பு ஆராதனைகளுடன் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. சேவியர் திடலில் ஏராளமான கிறிஸ்துவ மக்கள் குடும்பத்துடன் திரண்டு பண்டிகையை கொண்டாடினர். தமிழ், தெலுங்கு, கன்னடம், கொங்கனி, ஆங்கில மொழிகளில் திருப்பலி நடத்தப்பட்டது. கொரோனாவில் இருந்து விடுபட்டு உலகம் இயல்பு நிலைக்கு திரும்பவேண்டி பிரார்த்தனை செய்தனர்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு புதுச்சேரி அரசு அனுமதி அளித்துள்ளதால், தேவாலயங்களில் ஏராளமானோர் திரண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். வெளிநாடு, வெளிமாநில மக்களும் பிரார்த்தனையில் பங்கேற்றனர். புதுச்சேரி கடற்கரையில் உள்ள புனித மேரி பேராலயத்தில் ஆர்வமுடன் குவிந்து கிறிஸ்து பிறப்பை கொண்டாடினர்.
கன்னியாகுமரி மாவட்டம் பாலப்பள்ளம் பகுதியில் இயேசு பிறப்பை கொண்டாடும் வகையில் அமைக்கப்பட்ட மிகப்பெரிய குடில் மக்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் அங்குள்ள பேராலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது.
இதே போல் தஞ்சாவூர், திருச்சி, கிருஷ்ணகிரி, நெல்லை, மதுரை, திருப்பூர், புதுக்கோட்டை உள்பட தமிழகம் முழுவதும் தேவாலயங்களில் மக்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News