
பாஜகவின் தொடர் போராட்டம் மற்றும் ஆளுநர் சந்திப்பு குறித்த கேள்விகளுக்கு, "போராட்டம் போராட்டம் என நடத்தி மக்களை தொந்தரவு செய்யவோ, இடையூறு செய்யவோ விரும்பவில்லை" என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதில் அளித்துள்ளார்.
மதுரை சந்தைபேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கழக அமைப்பு தேர்தல் தொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம் விருப்ப மனுக்களை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பெற்றுக்கொண்டார். இதில் தேர்தல் பொறுப்பாளர்களான முன்னாள் அமைச்சர் வளர்மதி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு முன்னர், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் ‘அதிமுக கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கவில்லை’ என்ற ராமதாஸின் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “அதிமுக, பாமக கூட்டணியில் இருந்து விலகிவிட்டது. அப்படி அவர்கள் விலகிய பின் பேசும் கருத்துகளுக்கு எப்படி நாங்கள் பதில் சொல்ல முடியும்? பாமகவினர் பேசுவதற்கு அதிமுகவின் தலைமை பதில் சொல்லும்” என்றார்.

தொடர்ந்து அவரிடம் “தமிழகத்தில் பாஜக தான் எதிர்க்கட்சியாக செயல்படுகிறதா? போராட்டம், ஆளுநரை சந்திப்பது என செயல்படுகின்றனரே...” என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “பாஜக வளரும் கட்சி என்பதால் அவர்களின் செயல்பாடுகள் அப்படித் தான் இருக்கும். யார் போராட்டம் நடத்துகிறார்கள் என்பது முக்கியமல்ல. மக்களை கவரும் வகையில், எண்ணத்தை பிரதிபலிக்கிற போராட்டத்தை, அரசுக்கு வலுவான கருத்தை எடுத்துரைக்கும் போராட்டமாக இருக்க வேண்டும். போராட்டம் போராட்டம் என்று மக்களை தொந்தரவு செய்யவோ, இடையூறு செய்யவோ தலைவர்கள் விரும்பவில்லை” என பேசினார்.
தொடர்ந்து பேசுகையில், “நகர்ப்புற தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. திமுக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள். அம்மா உணவகத்தை தமிழக அரசு தொடர்ந்து நடத்த வேண்டும்” என்றார்.
- மணிகண்டபிரபு
தொடர்புடைய செய்தி: வேதா இல்லத்தை வாங்குகிறதா அதிமுக? - செல்லூர் ராஜூ பதில்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News