திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே, வீட்டுக்கு மின்சாரம் வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் ஒரு குடும்பம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா கோட்டநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி வேலை செய்து வரும் இவருக்கு, காளீஸ்வரி என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், இவர்களுக்கு கடந்த 20 வருடங்களுக்கு முன்பு தமிழக அரசின் சார்பில் தொகுப்பு வீடு வழங்கப்பட்டது.
இதையடுத்து வீடு வழங்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை வீட்டிற்குத் தேவையான குடிநீர், மின்சாரம் போன்ற எந்த வசதியும் செய்து தரப்படவில்லை. இதுகுறித்து முனியப்பன் பலமுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் இவர்களது மூன்று குழந்தைகளும் வீட்டில் மண்ணெண்ணெய் விளக்கில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று 20.12.21 பாதிக்கப்பட்ட முனியப்பன் தம்பதி தங்களது 3 பள்ளி குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் விசாகனிடம் புகார் மனு அளித்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News