
போளுவாம்பட்டி வனச்சரகத்தில் ஆண் யானை உயிரிழந்த நிலையில், தந்தங்கள் வெட்டி எடுக்கப்பட்டது வனத்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வனச்சரகம் ஜவ்காடு வனப்பகுதியில், தற்போது வலசை காலம் என்பதால் கேரள வனப்பகுதியில் இருந்து ஏராளமான யானைகள் இந்தப் பகுதியில் முகாமிட்டுள்ளன. இந்நிலையில், போளுவாம்பட்டி வனத் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆண் யானை உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது. இதனையடுத்து வனப் பணியாளர்கள், உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் தலைமையிலான வனத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் உயிரிழந்தது சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் யானை என்பதும், உயிரிழந்த ஆண் யானையின் இரண்டு தந்தங்களை வெட்டி எடுத்திருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து வனத்துறை மருத்துவர்கள் உயிரிழந்த யானையின் உடலை பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். யானை உயிரிழந்த பகுதி வெள்ளியங்கிரி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ளதால் வேட்டை கும்பல் இந்த பகுதியில் ஊடுருவி யானை வேட்டையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News