
வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், மழை காலங்களில் மின் விபத்துக்களை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ளது.
காற்று மற்றும் மழைக்காலங்களில் மின் கம்பங்கள், மின் மாற்றிகள், மின் கம்பிகள்,மின் பகிர்வு பெட்டிகள் மற்றும் ஸ்டே கம்பிகள் அருகில் செல்ல வேண்டாம் என்றும், மின் கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் சென்று தொட முயற்சிக்காமல் மின் வாரிய அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இடி, மின்னலின் போது மரத்திற்கு அடியிலோ, வெட்ட வெளியிலோ செல்ல கூடாது என்றும், மின் சாதண பொருட்களை பயன்படுத்தக்கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மழையின் போது வீடுகளில் உள்ள சுவர்களில் தண்ணீர் கசிவு ஏற்பட்டால் அந்த பகுதியில் மின்சாரம் உபயோகிப்பதை தவிர்ப்பதோடு, வீடுகளில் மின் இணைப்பிற்கான சர்வீஸ் மெயின் அருகில் ELCB யை பொருத்தினால் மின் விபத்துகளில் இருந்து தவிர்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், ஈரக்கைகளால் சுவிட்சுகளை இயக்கக்கூடாது என்றும், மின் சாதனங்களை பயன்படுத்தும் போது நில இணைப்புடன் கூடிய மூன்று பின் சாக்கெட்டு பிளக்குகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மின் கம்பத்திலோ அதை தாங்கும் கம்பியிலோ கால்நடைகளை கட்டுவதை தவிர்ப்பதோடு, மின் கம்பங்களை பந்தல்களாகவோ, விளம்பர பலகைகளாகவோ பயன்படுத்தக்கூடாது என்றும், கட்டிடங்களை கட்டும்போது போதுமான இடைவெளி உள்ளதா என்பதை தெரிந்துக்கொண்ட பின் கட்டுமான பணிகளை தொடங்க வேண்டும் என்றும் மின்வாரியம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், விழாக்காலங்களில் மின் பாதைகளுக்கு அருகில் அல்லது அடியில் தேர் மற்றும் பல்லக்கு இழுக்கும் போது முன்கூட்டியே மின்வாரிய அலுவலர்களுக்கு தெரிவித்து முன்னேற்பாடுகளை மேற்கொள்வதோடு, பச்சை மரங்கள் மற்றும் இரும்பு கிரீல்களில் அலங்கார சீரியல் விளக்குகளை கட்டுவதை தவிர்க்க வேண்டும் என்றும் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் உத்தரவிட்டுள்ளது.
இதனைப்படிக்க...பாஜக பிரமுகர் கல்யாணராமன் மீது குண்டர் சட்டம் - சென்னை கமிஷனர் உத்தரவு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News