கொரோனா அச்சம்: தீபாவளியன்று திரையரங்குகளை மூட உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு

தீபாவளி நாளான நவம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் திரையரங்குகளை மூட உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்த சிவமுருகன் ஆதித்தன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருக்கிறார். அதில், 'தற்போது தொடர்ச்சியாக திருவிழா காலமாக இருப்பதால் கொரோனா நோய் தடுப்பு வழி முறைகளை, பொதுமக்கள் தாங்களாக பின்பற்றுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.

தொடக்கத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவலை கருத்தில் கொண்டு திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் நோய்த் தொற்று பாதிப்பு குறைந்ததன் காரணமாக கடந்த ஜனவரி 6ஆம் தேதி முதல் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டது.

image

தமிழகத்தில் அக்டோபர் 26-ம் தேதி விபரப்படி புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1090. இது தமிழகம் இன்னும் கொரோனாவின் பிடியிலிருந்து விடுபடவில்லை என்பதை உணர்த்துவதாக அமைகிறது. இந்நிலையில் திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதி வழங்கியுள்ளது கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரிக்கவே காரணமாக அமையும்.

கோவில் திருவிழாக்கள், குடமுழுக்கு விழாக்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகளில் பொதுமக்கள் ஒன்று கூட நவம்பர் 15ஆம் தேதி வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திரையரங்கங்கள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்கும் போது சமூக இடைவெளியை முறையாக பின்பற்றுவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு. கொரோனா முதல் அலையின் போதே மாஸ்டர் பட வெளியீட்டின் போது கொரோனா நோய்த் தடுப்பு விதிகள் மீறப்பட்டதாக 50-க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

image

தற்போது தீபாவளியை ஒட்டி அண்ணாத்தே, ஜெய்பீம், மாநாடு, எனிமி, வா டீல் ஆகிய படங்கள் திரைக்கு வரவுள்ளன. இம்மாத தொடக்கத்தில் ருத்ரதாண்டவம் படம் வெளியான போதும் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு வழிமுறைகளை யாரும் பின்பற்றவில்லை. திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதிப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இதுதொடர்பாக நடவடிக்கைக் கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

ஆகவே, சினிமா திரையரங்குகள், மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதித்து அக்டோபர் 23 பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பை ரத்து செய்தும், நவம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் திரையரங்குகளை மூடவும் உத்தரவிட வேண்டும்' என கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post