
'புதிய தலைமுறை' செய்தி எதிரொலியாக ஆற்றங்கரையோரங்களில் வீசப்பட்ட மருத்துவ கழிவுகள் மற்றும் குப்பைகள் அகற்றப்பட்டன.
திருவாரூர் மாவட்டம் பேரளம் பேரூராட்சிக்கு உட்பட்ட அகர கொத்தங்குடி கிராமத்தில் உள்ள வாஞ்சி ஆற்றின் கரையோரத்தில் மருத்துவக் கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்பட்டது குறித்து 'புதிய தலைமுறை'யில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து திருவாரூர் மாவட்ட இணை இயக்குனர் சிவக்குமார் தலைமையில் மருத்துவக் குழுவினர் வாஞ்சியாறு கரைகளில் கொட்டப்பட்டிருந்த மருத்துவக் கழிவுகளை அகற்றினர். அதுபோலவே பேரளம் பேரூராட்சி நிர்வாகம் வாஞ்சியாறு கரை ஓரத்தில் கொட்டப்பட்டிருந்த குப்பைகளும் அகற்றப்பட்டது. மேலும் மருத்துவ கழிவுகள் எங்கிருந்து வந்து கொட்டப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
பேரளம் பேரூராட்சிக்குட்பட்ட தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் ரத்த மாதிரி நிலையங்களில் திருவாரூர் மாவட்ட இணை இயக்குனர் சிவக்குமார் தலைமையிலான மருத்துவ குழுவால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் பேரளம் பேரூராட்சிக்குட்பட்ட தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் ரத்தமாதிரி நிலையங்களில் இருந்து இந்த மருத்துவக் கழிவுகள் கொட்டப்படவில்லை என்றும் இந்த மருத்துவ கழிவுகள் வேறு எங்கிருந்தோ வந்து வாஞ்சி ஆற்றின் கரையோரத்தில் கொட்டப்பட்டுள்ளது எனவும் திருவாரூர் மாவட்ட இணை இயக்குனர் சிவக்குமார் தெரிவித்தார். வாஞ்சி ஆற்றின் கரையோரத்தில் மருத்துவக் கழிவுகளை வீசிச் சென்றது யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Tags:
News