
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரின் ஏனாதி கிராமத்தில் உள்ள மேலத்தெரு மற்றும் கீழத்தெருவைச் சேர்ந்த மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். மேலத்தெரு மக்களுக்காக போஸும் (பிரபு) கீழத்தெருவினருக்காக சித்ரவேலும் (இளவரசு) ஊர்த் தலைவர்களாக இருந்து வழிநடத்தி கொண்டு செல்ல, சாதியைக் கடந்த நட்பு மேலோங்குகிறது. அரசியல் ஊருக்குள் வந்தால் எங்கே பிரிவினை வந்துவிடுமோ என பயந்து, அரசியல் கட்சியினரைக் கூட ஊர்மக்கள் அனுமதிப்பதில்லை. இப்படியான சூழலில் அரசியல் சுயலாபத்துக்காக ஏனாதி கிராமத்தில் உள்ள இருவேறு சமூகத்தினரிடையே பிரிவினை ஏற்படுத்தும் முயற்சிகள் தீவிரமெடுக்கின்றன. அம்மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சரின் உத்தரவின் பேரில் களமிறங்கும் உள்ளூர் எம்எல்ஏ அதில் வெற்றிகண்டாரா? இல்லையா? - இதுதான் படத்தின் திரைக்கதை.
நிலம் சார்ந்த மக்களின் வாழ்வியலை கண்ணாடியாய் பிரதிபலித்து தேர்ந்த கதைசொல்லியாய் கவனம் பெற்ற விக்ரம் சுகுமாரனின் அடுத்த படைப்பாக வெளியாகியிருக்கிறது ‘இராவணக் கோட்டம்’. 1957-ல் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் நடந்த ‘கீழத்தூவல் படுகொலை’, சீமைக் கருவேல மர பிரச்சினை, கார்ப்ரேட் மாஃபியா என பல்வேறு விஷயங்களை காட்சிப்படுத்த முனைந்திருக்கிறார் இயக்குநர். மக்கள் சாதி ரீதியாக பிளவு பட்டிருப்பதற்கு அரசியல்வாதிகளின் சூழ்ச்சியே காரணம் என்பதை நிறுவும் படம், காதலை அதற்கான கருவியாக எடுத்துக்கொள்கிறது. ஆனால், அந்தக் காதல் காட்சிகள் வெறும் சம்பிரதாயமாக அணுகப்பட்டிருப்பதும், அதற்கு முட்டுக் கொடுக்க பாடல்களை துணைக்கு அழைத்திருப்பதும் தேவையான தாக்கத்தை கொடுக்கவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்