’3 நாட்கள் பள்ளிக்கு வந்தாலே ஹால் டிக்கெட் தரப்படும்’ என அமைச்சர் சொன்னாரா? உண்மை என்ன?

மாணவர்கள் அரசு பொதுத் தேர்வெழுத 75 சதவீதம் வருகைப்பதிவு அவசியம் என தஞ்சையில் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

50 ஆயிரம் மாணவர்கள் ஆப்செண்ட்!

தமிழ்நாட்டில் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்வு தொடங்கிய முதல் நாளே மிகப்பெரிய அதிர்ச்சியாக தகவல் வெளிவந்தது. அதாவது, சுமார் 50,000 மாணவர்கள் தினசரி தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆகின்றனர் என்ற செய்தி தமிழகத்தையே அதிர செய்தது. ஏன்? எதனால்? எப்படி? மாணவர்கள் தேர்வு எழுதாமல் போகிறார்கள் என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றது.

இதனிடையே, மீண்டும் தேர்வெழுத மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? என்பது குறித்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதுஒருபுறம் மூன்று நாட்கள் பள்ளிக்கு வந்தாலே பொதுத் தேர்வெழுத அனுமதிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்னதாக தகவல் ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. இது குறித்து அமைச்சரே விளக்கம் அளித்துள்ளார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் சொல்வது என்ன?

தஞ்சையில் இன்று தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசிய போது, "அரசு பொதுத் தேர்வெழுத 3 நாட்கள் பள்ளிக்கு வந்தால் ஹால் டிக்கெட் தரப்படும் என்று நான் கூறவில்லை. கடந்த ஆட்சியில் கொரோனா காலத்தில் இந்த வழிமுறை பின்பற்றப்பட்டது. 3 நாள் பள்ளிக்கூடம் வந்தால் ஹால் டிக்கெட் என்பது தவறான செய்தி. கல்வி ஆண்டில் 75 சதவீதம் வருகைப்பதிவு உள்ள மாணவர்களுக்கு மட்டுமே அரசு பொதுத் தேர்வெழுத ஹால் டிக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது. வரக்கூடிய கல்வி ஆண்டிலும் இதே முறை பின்பற்றப்படும்.

image

 மாணவர்கள் பொதுத் தேர்வெழுத பயப்படக் கூடாது. தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதுங்கள் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அவர் மாணவர்களின் தந்தை ஸ்தானத்தில் இருந்து அறிவுரை வழங்கியதாக கூறினார். எனவே மாணவர்கள் பயப்படாமல் தேர்வு எழுதுங்கள்.

பொதுத் தேர்வெழுத வராத மாணவர்களின் பெற்றோர்களை அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் உடனுக்குடன் தொடர்பு கொண்டு தேர்வு எழுத வராத காரணத்தை கேட்டறிந்து வருகின்றனர். மேலும் இனி வரக்கூடிய தேர்வை கண்டிப்பாக எழுத வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். இதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார்” என்றும் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக கல்வியாளர் நெடுஞ்செழியன் புதிய தலைமுறைக்கு அளித்திருந்த நேர்காணலில், “மொழித்தாள் எழுதாத மாணவர்கள் பிற பரிட்சைகளும் எழுதாமல் போகும் வாய்ப்புள்ளது. இவர்கள் திடீரென பரிட்சைக்கு விடுப்பு எடுத்தவர்களாக இருக்க வாய்ப்பில்லை. வகுப்பையே புறக்கணித்திருப்பார்கள். அப்போதே கண்காணித்து வந்திருக்க வேண்டும். மாணவர் – ஆசிரியர் இடையேயான இடைவெளி அதிகரிக்கும் போது, இப்படியான சிக்கல்கள் ஏற்படலாம். மொழித்தேர்வென்பது, பிற பாடங்களைகாட்டிலும் ரொம்பவும் எளிமையானது. எப்படியும் பாஸ் பண்ணிவிடலாம் என மாணவர்களுக்கு நம்பிக்கையை விதைக்கக்கூடியது மொழித்தேர்வுகள்தான். அப்படியானவற்றையே அவர்கள் புறக்கணித்திருக்கிறார்கள் எனில், சிக்கல் பாடத்தில் இல்லை. வருகையிலேயே இருந்திருக்கிறது.

மாணவர்கள் இடைநிற்றலை நாம் கவனத்தில் எடுத்து ஆலோசிக்க வேண்டிய நேரம் இது. பள்ளிப்பருவத்தில் குழந்தை தொழிலாளர்களாக மாணவர்கள் அதிகம் உள்ளனர். நகர்ப்புறங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் நகர்ப்புறங்களில், காலையில் பள்ளிக்கு சென்றுவிட்டு மாலையில்தான் வேலைக்கு செல்கின்றனர். கிராமங்களில் நிலைமை அப்படி இல்லை. அங்கு முழுமையாக படிப்பைவிட்டுவிட்டு, வேலைக்கு செல்கின்றனர். அங்குதான் சிக்கல் தீவிரமாகிறது. அவர்களை அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் கண்டறிந்து, அப்போதே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமூகத்தை சமன்படுத்த வேண்டிய கடமை நமக்கு உள்ளது. இங்கு நிலவும் ஏற்றத்தாழ்வுகளால் தான் இப்படியான சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதை சரிசெய்தால்தான், நம்மால் மாணவர்களை கல்வியை நோக்கி கொண்டுவரமுடியும்” என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post